ட்ரோன் மூலம் பாகிஸ்தான் எல்லையில் ஹெராயின் கடத்த நடைபெற்ற முயற்சியை எல்லை பாதுகாப்பு படை முறியடித்துள்ளது. அமிர்தசரஸ் அருகே எல்லைப்பகுதியில் பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் விமானம் பறந்து வந்ததை கண்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு அதை வீழ்த்தினர். திங்கட்கிழமை (இன்று) அதிகாலையில் இந்த சம்பவம் நடைபெற்றதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் விமானத்தை கைப்பற்றிய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அதில் 9 பைகள் இருந்ததைக் கண்டறிந்தனர். அந்த பைகளில் ஹெராயின் போதைப் பொருள் நிரப்பப்பட்டிருந்தது என்றும் மொத்தம் 10.67 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது எனவும் எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து ஆளில்லாத ட்ரோன் விமானங்கள் மூலமாக அடிக்கடி போதைப் பொருட்கள் கடத்தப்படுவது தொடர்ந்து வருகிறது என எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இதேபோல ஆயுதங்களும் கடத்தப்படுவது எல்லைப் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
சமீபத்திய செய்தி: ஷாகின் பாக் பகுதியில் புல்டோசர்களுடன் குவிந்த போலீஸார் – போராட்டத்தில் குதித்த மக்கள்!
விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானிலிருந்து பறந்துவரும் ஆளில்லாத விமானங்கள் பல முறை காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆகவே கூடுதல் கவனத்துடன் எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணிகளை அதிகரித்து ட்ரோன்கள் மூலம் கடத்தல் நடைபெறுவதை தடுக்க முயற்சி செய்து வருகின்றனர். சமீபத்தில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காக சுரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதையும் எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM