அனைத்து கட்சிகளின் உடன்பாட்டுடன் முன்னெடுக்கப்படும் ஒன்றிணைந்த அரசாங்கத்தின் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு புதிய மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி விருப்பத்துடன் இருப்பதாக வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்தார்.
இது தொடர்பில் தற்பொழுது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ ,எதிர்கட்சியுடனும் பொதுஜன பெரமுனவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
பிரதமரை நீக்குவதற்கு ஜனாதிபதி எந்தவித தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறான விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்கு வசதியான முறை பிரதமர் வெளியேறுவதனால் ஏற்படக்கூடிய அனைத்து அமைச்சரவையையும் இராஜினாமா செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் வெளிநாட்டு செலாவணி நெருக்கடி காரணமாக நாட்டில் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
பொருட்களின் விலை அதிகரிப்பு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு போன்ற விடயங்களினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
சமூக அரசியல் நெருக்கடி நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது.
இந்த நிலை ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் விவாதிப்பதினால் பொது மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை.
இதனை தீர்ப்பதற்கு சமகால அரசாங்கம் ஆகக்கூடுதலான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இருப்பினும் இதன் மூலம் மாத்திரம் தீர்வை காண முடியாது.
அனைத்து பிரிவுகளிலும் பொருளாதாரத்தை வலுவூட்ட வேண்டும்.. இதேவேளை செலவை குறைத்து ஊழல் மற்றும் மோசடியும் நிறுத்தப்பட வேண்டும்.
தற்பொழுது எமக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியமாகும்.
சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு கொண்டுவருவது முக்கியமானதாகும். இதற்காக சர்வதேசத்தில் இலங்கையின் நற்பெயர் சிறந்ததாக இருக்க வேண்டும். வெளிநாடுகளில் தற்பொழுது பேசப்படும் விடயங்கள் நாட்டின் நற்பெயரை கட்டியெழுப்ப கூடியதாக இருக்கும் என்று கூறுவதற்கு இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.