டெல்லி:
திருமணத்திற்கு முன்னதாக தன்னை பத்து வருடமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக 32 வயது பெண் கொடுத்த புகாரின் பேரில் சாகித்திய அகாதமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் நிலோத்பால் மிருணாள் மீது டெல்லியில் உள்ள திமார்பூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில்,
கடந்த பத்து வருடமாக டெல்லியில் உள்ள முகர்ஜி நகரில் வாடகை வீட்டில் வசித்து யுபிஎஸ்சி தேர்விற்கு தயாராகி வருகிறேன்.
பத்து வருடங்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலமாக பிரபல எழுத்தாளரும் நானும் நண்பர்களாகினோம். அதன் பின்னர், கடந்த 2013 ஆம் ஆண்டு நான் கண் பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்கு தாமதமானதால், அவர் என்னை அடித்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர், மறுநாள் தன்னை திருமணம் செய்வதாக சத்தியம் செய்தார்.
இவ்வாறு புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், அந்த எழுத்தாளர் போலீஸ் நடவடிக்கையை தவிர்ப்பதற்காக தன்னை திருமணம் செய்வதாக கூறியதாகவும், இது போன்று பல பெண்களிடம் கூறியிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், போலீஸ் அதிகாரி ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை அழைத்து எழுத்தாளர் நிலோத்பால் மிருணாளை மிரட்டி பணம் பறிப்பதற்காக இவ்வாறு குற்றம்சாட்டுகிறார் என்று கூறியுள்ளார்.