* உளவுத்துறை எச்சரிக்கையை கோட்டை விட்ட பாஜக அரசுசண்டிகர்: தர்மசாலாவில் உள்ள இமாச்சல் சட்டப் பேரவை வளாகத்தில் ‘காலிஸ்தான்’ கொடி ஒட்டிய விவகாரத்தால், இமாச்சலின் 5 மாநில எல்லைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், உளவுத்துறை எச்சரிக்கையை கோட்டை விட்ட பாஜக அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ஆண்டுதோறும் குளிர்கால கூட்டத்தொடர்கள் தர்மசாலாவில் உள்ள மாநில சட்டப்பேரவை அரங்கில் நடைபெறும். இதர நேரங்களில் சிம்லாவில் கூட்டத்தொடர்கள் நடைபெறும். இந்நிலையில் தர்மசாலா பேரவை வளாக பிரதான நுழைவுவாயிலிலும், அதையொட்டிய சுற்றுச்சுவரிலும் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ‘காலிஸ்தான்’ கொடிகள் நேற்று கட்டப்பட்டிருந்தன. பின்னர் அந்தக் கொடிகள் உடனடியாக அகற்றப்பட்டன. சுற்றுச்சுவரில் கொடிகளுக்குக் கீழே ‘காலிஸ்தான்’ என எழுதப்பட்டிருந்த நிலையில், அவை அழிக்கப்பட்டு சுவற்றில் மீண்டும் வா்ணம் பூசப்பட்டது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில பாஜக முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்தார். இம்மாநிலத்தை சுற்றிலும் அண்டை மாநிலங்களான ஜம்மு காஷ்மீர், லடாக், உத்தரகண்ட், அரியானா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்கள் உள்ளன. இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இமாச்சல் பிரதேசம் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ‘காலிஸ்தான்’ கொடிகள் பேரவை வளாகத்தில் கட்டப்பட்டிருப்பதால், அம்மாநில அரசு தனது பாதுகாப்பில் கோட்டைவிட்டதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுகுறித்து உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘தடை செய்யப்பட்ட சீக்கியர்கள் நீதிக்கான (எஸ்எப்ஜே) அமைப்பானது, இமாச்சலப் பிரதேசத்தில் ஜூன் 6ம் தேதி வாக்கெடுப்பை நடத்தப்போவதாக அறிவித்தது. ஏப்ரல் 26ம் தேதி உளவுத்துறை தரப்பில் முன்னெச்சரிக்கை கடிதம் ஒன்று மாநில அரசுக்கு அனுப்பப்பட்டது. காலிஸ்தான் கொடி ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு அம்மாநில அரசு தடை விதித்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில், அந்த அமைப்பின் தலைவர் குருபத்வந்த் சிங் பன்னு, இமாச்சலப் பிரதேச முதல்வருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதாகவும், விரைவில் காலிஸ்தான் கொடி ஏற்றப்படும் என்று எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது’ என்று கூறின. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘மாநிலம் முழுவதும் எல்லைப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அங்கு போலீஸ் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஓட்டல்கள் மற்றும் பிற இடங்களில் கடுமையான கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவுகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு உஷார்படுத்தப்பட்டுள்ளனர்’ என்றனர். காலிஸ்தான் கொடி விவகாரத்தால், வடமாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தலைவன் மீது ‘உபா’ சட்டம் பாய்ந்ததுகாலிஸ்தான் கொடிகள் கட்டிய விவகாரம் தொடர்பாக, தடை செய்யப்பட்ட சீக்கியர்கள் நீதிக்கான (எஸ்எப்ஜே) அமைப்பு மற்றும் அதன் தலைவன் குருபத்வந்த் சிங் பன்னு மீது தீவிரவாத எதிர்ப்பு சட்டமான ‘உபா’ வழக்கு பதியப்பட்டுள்ளதாக இமாச்சல பிரதேச காவல்துறைத் தலைவர் சஞ்சய் குண்டு தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 153 ஏ மற்றும் 153 பி பிரிவுகளின் கீழ் வழக்குபதியப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாத எதிர்ப்பு சட்டமான உபா சட்டப் பிரிவு 13-ன் கீழ் எஸ்எப்ஜே அமைப்பு மற்றும் அதன் தலைவனும் முக்கிய குற்றவாளியுமான குருபத்வந்த் சிங் பன்னு மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தர்மசாலா அடுத்த கானேட் கிராமத்தைச் சேர்ந்த ராம் சந்த் என்ற அஜய் குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில், இந்த எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.