போராட்டம் தேவையற்றது: ஜிப்மரில் இந்தி திணிப்பு இல்லை- கவர்னர் தமிழிசை உறுதி

புதுச்சேரி:

புதுவை ஜிப்மரில் இந்தி திணிக்கப்படுவதை கண்டித்து தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் சென்னையிலிருந்து கவர்னர் தமிழிசை நேரடியாக புதுவை ஜிப்மருக்கு வந்தார். அங்கு காலை 11.30 மணியளவில் நிர்வாக பிரிவு அலுவலகத்தில் உள்ள இயக்குனர் அலுவலகத்துக்கு சென்றார்.

அங்கு இயக்குனர் ராகேஷ் அகர்வால் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடம் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

பின்னர் ஜிப்மரில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கவர்னர் தமிழிசை கூறியதாவது:

தமிழகத்திலும், புதுவையில் ஜிப்மரில் இந்தி திணிக்கப்படுவதாக ஒரு கருத்து நிலவுகிறது. நிர்வாகரீதியாக அளிக்கப்பட்ட சுற்றறிக்கை தவறாக திரிக்கப்பட்டு, இந்தி திணிக்கப்படுவதாக செய்தி உலா வந்துள்ளது. கொரோனா காலத்தில் தமிழகம், புதுவை மக்களுக்கு ஜிப்மர் ஆற்றிய சேவை அளப்பரியது. ஜிப்மரில் மொழி திணிப்பு இல்லை. உள்கட்டமைப்புக்காக, நிர்வாகரீதியாக கொடுக்கப்பட்ட சுற்றறிக்கை தவறாக திரிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 4 சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் 2 சுற்றறிக்கை மட்டும் வெளியில் வந்துள்ளது. மற்ற சுற்றறிக்கையில் பொதுமக்கள் தொடர்பான கருத்துகள், துறைரீதியானவை தமிழில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர் மொழியான தமிழை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

ஜிப்மர் மத்திய அரசின் நிறுவனம். இங்கு இந்தி மட்டுமே தெரிந்தவர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்காக இந்தியை பயன்படுத்த கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சட்டவிதிகளை நினைவுபடுத்தி உறுதிப்படுத்தும் வகையில்தான் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஜிப்மரில் தமிழிலேயே பெயர் பலகைகள் இருக்கிறது. இயக்குனர் அலுவலகத்தில்கூட அவரின் பெயர் தமிழில்தான் முதலில் எழுதப்பட்டுள்ளது. அடுத்தபடியாக ஆங்கிலம், 3வதாக இந்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தி மட்டும் தெரிந்த பணியாளர் சேவை புத்தகத்தில் இந்தியை பயன்படுத்தும்படி கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் நோயாளிகளுக்கான மருத்துவ சேவை, குறிப்புகள் தமிழில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜிப்மரில் இந்தி திணிப்போ, வெறியோ இல்லை. ஜிப்மரின் மருத்துவ சேவைகள் தொடர நாம் அனுமதிக்க வேண்டும்.

அதற்கு எந்த இடையூறும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். எனவே போராட்டம் என்பது தேவையற்றது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.