புதுடெல்லி:
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள விமான நிலையத்துக்கு கடந்த 7-ம் தேதி தனது 10 வயது மதிக்கத்தக்க மகனுடன் பெற்றோர் இருவர் வந்துள்ளனர். அந்த சிறுவன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தான். அப்போது சிறுவனின் நடவடிக்கையை கண்ட இண்டிகோ நிறுவனத்தினர், அவரது பெற்றோரை அழைத்து அவர்களின் மகனை விமானத்தில் ஏற்றினால் மற்ற பயணிகள் பாதிக்கப்படுவர் என்று கூறி, திரும்பிச் செல்லும்படியும் கூறியுள்ளனர். இண்டிகோ நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இது தொடர்பாக இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வருவதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கூறி உள்ளார். விசாரணைக்குப் பின் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இண்டிகோ நிறுவனம் மீது ஜார்க்கண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தி உள்ளது. மேலும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கனூங்கோ கேட்டுக்கொண்டுள்ளார்.