மன்னார் கடல் நிலப்படுகையில் காணப்படும் எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்கு வேலைத்திட்டம் தயாரிக்கப்படாமை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) கவனம் செலுத்தியது.
வலுக்தி அமைச்சு தொடர்பான 2018, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் நேற்று (05) கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. இக்குழுவின் தலைவர் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண ஆவார்.
2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு ஆராய்ந்து பெற்ற தகவல்களுக்கு அமைய மன்னார் கடல் நிலப்படுகையிலிருந்து 5 பில்லியன் பரல் எரிபொருளும், 5 ட்ரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயு காணப்படுவதாகவும், இது 60 வருடகாலத் தேவையைப் பூர்த்திசெய்யப் போதுமானது என அன்றையதினம் வருகைதந்திருந்த அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார். நாட்டின் மின்சார உற்பத்தியை 1130 கிலோவட் வரை அதிகரிக்க இவற்றைப் பயன்படுத்த முடியும் என்றும், இயற்கை எரிவாயுவை உற்பத்திசெய்வதன் ஊடாக 25 வருடங்களுக்குள் பல்வேறு துறைகளின் ஊடாக 200 பில்லியன் அமெரிக்க டொலர் நன்மைகளைப் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், அடையாளம் காணப்பட்ட இரண்டு கனிய இருப்புக்களில் இருந்து இயற்கை எரிவாயுவை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதன் மூலம் நாட்டின் பல்வேறு துறைகளில் இருந்து பெறக்கூடிய வருவாயைப் பெறுவதற்கு அல்லது முறையான ஏற்பாட்டைச் செய்யாதது குறித்து கோபா குழு அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. இதற்கு நம்பகமான முதலீட்டாளரைக் கண்டுபிடிப்பது கடினம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விடயத்தை கையாள்வதற்கு இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை எனவும் தெரிவித்தனர்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கம், புதிய சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. சபுகஸ்கந்த தளத்தில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிகழ்வில் கலந்து கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, இது தொடர்பாக அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு கோபா குழு பரிந்துரைத்தது.
பணியாளர்களின் வெற்றிடங்கள் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டதுடன், நாட்டின் தினசரி எண்ணெய் தேவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் பி.வை.ஜி.ரத்னசேகர மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க, அசோக அபேசிங்க, (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மற்றும் காதர் மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டனர்.