ரஷ்யா அணு ஆயுதம் மூலம் பிரித்தானியாவைத் தாக்கினால், பிரித்தானியாவால் ரஷ்யா வீசும் ஏவுகணைகளைத் தடுக்கவோ, அழிக்கவோ முடியாது என்னும் கலங்க வைக்கும் தகவல் ஒன்று வெளியாகி திகிலை உருவாக்கியுள்ளது.
ஒரு பக்கம், பிரித்தானியா உட்பட உக்ரைனை ஆதரிக்கும் நாடுகள் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருக்கிறது.
மறுபக்கம், ரஷ்யா சும்மா பூச்சாண்டி காட்டுகிறது, அது தாக்குதல் எல்லாம் நடத்தாது என்று பிரித்தானியா சொல்லிக்கொண்டிருக்கிறது.
ஆனால், உண்மையாகவே ரஷ்யா பிரித்தானியா மீது அணு ஆயுதத்தை ஏவி விட்டால்?
அப்படி ஒரு நிலை உருவானால், பிரித்தானியாவால் தன்னை நோக்கி வரும் ஏவுகணைகளை தடுக்கவோ, அழிக்கவோ முடியாது என்கிறார் Leicester பல்கலைக்கழக சர்வதேச உறவுகள் நிபுணரான பேராசிரியர் Andrew Futter.
பிரித்தானியாவைப் பொருத்தவரை, வம்புச் சண்டைக்கு போகாதே, வந்த சண்டையை விடாதே என்பதுதான் அதன் கொள்கை. அதாவது, யாராவது எங்களை அணு ஆயுதம் கொண்டு தாக்கினால், நாங்களும் அணு ஆயுதம் கொண்டு திருப்பித் தாக்குவோம் என்ற நிலைப்பாட்டைத்தான் பிரித்தானியா கொண்டுள்ளது.
ஆக, யாராவது அணு ஆயுத ஏவுகணை கொண்டு தாக்கினால், அதை நடு வானிலேயே தடுத்து அழிக்கும் தொழில்நுட்பம் பிரித்தானியாவிடம் இல்லை.
பிரித்தானியாவால் ஒரு அணு ஆயுத தாக்குதலையே தாங்க முடியாது. அப்படி இருக்கும்போது, பல தாக்குதல்கள் என்றால், பிரித்தானியா என்னும் ஒரு நாடே இருக்காது என்கிறார் Andrew Futter.
அதனால், அணு ஆயுத தாக்குதல்கள் நிகழாமல் தடுப்பதுதான், அதாவது, சண்டையைத் தவிர்ப்பதுதான் நம்மை பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி என்று கூறியுள்ளார் பிரித்தானிய பேராசிரியர் Andrew Futter.