மும்பை: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசில் இந்திய ரூபாயின் மதிப்பு ஐசியூவில் உள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பானது வரலாறு காணாத வகையில் நேற்று வீழ்ச்சி அடைந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து ரூ.77.41 ஆக வீழ்ச்சி அடைந்தது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியானது ஒன்றிய பாஜ அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில், ‘‘இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூக உண்மைகளை பிரதமர் மோடியால் எப்போதும் மறைத்து வைக்க முடியாது’’ என்று பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் பொது செயலாளர் மற்றும் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தனது டிவிட்டர் பதிவில், ‘‘கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத வகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.77.41ஆக சரிந்துள்ளது. மோடி ஆட்சியில் இந்திய ரூபாயின் மதிப்பு ஐசியூவில் உள்ளது. பாஜவின் மார்க்தர்ஷாக் மண்டல் குழுவின் வயதை கடந்துவிட்டது. இந்திய ரூபாய் பிரதமரின் வயதை தாண்டியும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கான காரணங்கள் என்ன?’’ என்று பதிவிட்டுள்ளார்.