‘வீடு கட்டிக்கொடுங்க’- இட்லி விற்கும் மூதாட்டியின் கனவை நிறைவேற்றிய ஆனந்த் மஹிந்திரா

அன்னையர் தினத்தில் இட்லி பாட்டிக்கு வீடு கட்டிக்கொடுத்து அவரது கனவை ஆனந்த் மஹிந்திரா நிறைவேற்றினார்.
கோவை ஆலாந்துறையை அடுத்துள்ள வடிவேலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி கமலாத்தாள் (85). யாருடைய உதவியும் இல்லாமல் தனி ஆளாக கடந்த 30 வருடங்களாக அந்தப் பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார்.
image
மாவு அரைக்க கிரைண்டர் இல்லை, இட்லி சுட கேஸ் அடுப்பு இல்லை, சட்னி அரைக்க மிக்சி இல்லை. எல்லாமே விறகு அடுப்பும், ஆட்டுக்கல்லும்தான். இதனால் தான் சுடச்சுட ஆவி பறக்க சுவையான இட்லியை சூப்பரான சட்னி, சாம்பாருடன் விடியற்காலையிலேயே தயார் செய்து விற்று வருகிறார்.
இவரது கைப்பக்குவத்துக்கு சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் பலர் அடிமை என்றே சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்று வந்த மூதாட்டி, பிறகு படிப்படியாக விலையை உயர்த்தி இப்போது ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்.
image
மூதாட்டி கமலாத்தாள் சேவையை அறிந்த மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், அவரை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வாழ்த்தியதோடு, விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு, கிரைண்டர், மிக்சி, ஆகியவற்றை  வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து பாரத்கேஸ் நிறுவனம் மாதம் தோறும் இரண்டு கேஸ் சிலிண்டர்களையும், ஹெச்பி கேஸ் நிறுவனம் ஒரு சிலிண்டரையும் வழங்கி வருகின்றனர். இதையடுத்து மூதாட்டி கமலாத்தாள், ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி புகழிடம் தனக்கு ஒரு வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து அவர், ஆனந்த் மஹிந்திராவிடம் மூதாட்டியின் கனவு குறித்து சொல்லியுள்ளார்.
image
இதைத்தொடர்ந்து ஆனந்த் மஹிந்திரா உறுதியளித்தபடி முதற்கட்டமாக மஹிந்திரா குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான மஹிந்திரா லைஃப் ஸ்பேசஸ் நிறுவனம் 2.5 லட்சம் ரூபாய் செலவில் 1.75 சென்ட் நிலத்தை வாங்கி, கமலாத்தாள் பெயரில் பதிவு செய்து, அதற்கான ஆவணத்தை அவரிடம் வழங்கி உள்ளது.
இதேபோல அதிமுக முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏ-வான எஸ்பி.வேலுமணி, 2.5 லட்சம் ரூபாய் செலவில் 1.75 சென்ட் இடத்தை மூதாட்டிக்கு வாங்கிக் கொடுத்துள்ளனர். இதையடுத்து 3.5 சென்ட் நிலத்தில் வீடு மற்றும் இட்லிக் கடைகான கட்டுமானப் பணிகளையும் மஹிந்திரா நிறுவனம் தொடங்கியது.
image
இதையடுத்து கடந்த 5 ஆம் தேதி வீடு கட்டி முடிக்கப்பட்டு மஹிந்திரா குழுமத்தின் திருப்பூர் முதன்மை செயல் அதிகாரி இட்லி பாட்டி கமலாத்தாளிடம் வீட்டிற்கான சாவியை வழங்கினார். இதனை மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியை பதிவிட்டு அன்னையர் தினத்தில் மூதாட்டிக்கு வீடு வழங்கியது குறித்து நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.