வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஷவர்மா விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. சிக்கன் வகைகளில் ஒன்றான ஷவர்மாவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரமற்ற ஷவர்மா விற்பனை கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று நகர்மன்ற தலைவர் எச்சரிக்கை விடுத்தார். சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் சிக்கன் வகைகளில் ஒன்றான ஷவர்மா சாப்பிடத்தான் காரணமாக சிறுமி ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் இது போன்ற பாதிப்பு உள்ளதா என அறிய, பல்வேறு கடைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தினர். இந்நிலையில், குடியாத்தம் நகர் மன்றத்தில் இன்று அவசர கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது கங்கை அம்மன் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினர். அப்பொழுது நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர். அதாவது சுகாதாரமற்ற முறையில் பல கடைகளில் இறைச்சிகள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஷவர்மா விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நகர்மன்ற கூட்டத்தில் தலைவர் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து, குடியாத்தம் நகராட்சி தலைவர், ஷவர்மா விற்பனைக்கு தடை விதித்தார். மேலும் குடியாத்தம் பகுதியில் சிறுவர், சிறுமியர் ஷவர்மாவை அதிக அளவு சாப்பிடுவதாக தகவல் கிடைத்திருப்பதாகவும், குடியாத்தம் நகர்மன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருவதால் அந்த கடைகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், சுகாதாரமற்ற முறையில் இறைச்சிகள் விற்பனை செய்யும் கடைகளுக்கு மூடி சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக குடியாத்தம் நகர்மன்ற தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்தார்.