ஷாகின் பாக் பகுதியில் புல்டோசர்களுடன் குவிந்த போலீஸார் – போராட்டத்தில் குதித்த மக்கள்!

டெல்லி ஷாகின் பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அங்கு புல்டோசர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களுடன் போலீஸார் இன்று சென்றதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில் இரு சமூக மக்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதில் 9 போலீஸார் உட்பட ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜஹாங்கீர்புரி, ஷாகின்பாக் உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் ஆக்கிரமித்திருப்பதாகவும், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறும் டெல்லி பாஜக தலைவர் அனீஷ் குப்தா மாநகராட்சிக்கு கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜஹாங்கீர்புரியில் நகராட்சி நிர்வாகத்தினர் புல்டோசர்களை கொண்டு அங்குள்ள வீடுகளை இடித்து தள்ளினர். பின்னர் உச்ச நீதிமன்றம் தலையீட்டுக்கு பிறகு இந்த நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
image
இந்நிலையில், டெல்லியின் ஷாகின் பாக் பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நகராட்சி நிர்வாகத்தினர் புல்டோசர்கள், ஜேசிபி இயந்திரங்களுடன் அந்தப் பகுதிக்கு இன்று பிற்பகல் வந்தனர். அவர்களுடன் நூற்றுக்கணக்கான போலீஸாரும் பாதுகாப்புப் பணிக்காக வந்திருந்தனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காங்கிரஸ், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பலரும் ஷாகின் பாக் பகுதிக்கு வந்து மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
image
இதுகுறித்து டெல்லி ஒக்லா தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானுல்லா கான் கூறுகையில், “ஷாகின் பாக்கில் இருந்த ஆக்கிரமிப்புகள் ஏற்கனவே அகற்றப்பட்டு விட்டன. இப்போது இங்கு எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை. சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கவே இந்த நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது” என்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில்தான் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.