கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தலைமையில், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச பசும்பால் வழங்கும் ‘அமுதம்’ திட்டம் தொடக்க விழா இன்று மதியம் 3 மணியளவில் கோவையில் நடைபெறுவதாக இருந்தது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக அறிவிக்கப்படது. ஆனால், 4 மணி வரையிலும் நிர்மலா, வானதி உள்ளிட்டோர் வரவில்லை. இதனால் குழந்தைகள் கதறி அழுதன. குழந்தைகளை சமாதானப்படுத்த முடியாமல் பெற்றோர் தவித்தனர். அங்கு தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை உள்ளிட்ட வசதி செய்து கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் நிகழ்ச்சி நடந்த அரங்கத்திலேயே தாய்மார்கள் பால் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். சில பெற்றோர் குழந்தைகளை சமாதானப்படுத்த முடியாமல் அரங்குக்கு வெளியே சென்றும், செல்போன்களில் குழந்தை பாடல்களை போட்டும் காட்டினர். குழந்தைகள் ஒருகட்டத்தில் சோர்வாகி தூங்கிவிட்டன.
பின்னர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன் இருவரும் வந்ததால், நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் பேசிய வானதி சீனிவாசன், “இந்த நிகழ்ச்சிக்காக கைக்குழந்தைகளுடன் தாய்மார்கள் வந்திருக்கின்றனர். குழந்தைகளை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கும் தாய்மார்களுக்காக நிகழ்ச்சியை விரைவில் முடிக்க வேண்டும். எனக்கு ஓட்டுப் போடாத கடைக்கார்கள் கூட, ‘இது சிறப்பான திட்டம். நாங்கள் விற்றுத் தருகிறோம்’ எனக் கூறியுள்ளனர். இதற்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி. அரசியலில் மேடு, பள்ளம் சாதாரணம். சில நேரங்களில் பதவி இருக்கும். சில நேரங்களில் பதவி இருக்காது. அன்பு சகோதரி நிர்மலா என் வழிகாட்டி. உலகத்திலேயே வல்லமை படைத்த நிதியமைச்சர். நான் இந்த நிலையில் இருக்க அவர்தான் காரணம்” என்றார்.
நிகழ்ச்சியில் ‘பாலூட்டும் அறை ஏற்பாடு செய்யாதது ஏன்?’ என பா.ஜ.க-வினரிடம் கேட்டோம். “பாலூட்டும் அறை ஏற்பாடு செய்திருந்தோம். இதுகுறித்து பெற்றோரிடமும் முன்பே கூறியிருந்தோம்’ என்றனர்.
ஆனால், இதுகுறித்து சில தாய்மார்களிடம் கேட்டபோது, “பாலூட்டும் அறை குறித்து எந்தத் தகவலும் எங்களுக்குச் சொல்லப்படவில்லை” என்றனர்.