2024 பாராளுமன்ற தேர்தல்- மதுரையில் பா.ஜனதா நிர்வாகிகளுடன் அண்ணாமலை நாளை ஆலோசனை

சென்னை:

தமிழகத்தில் பா.ஜனதா கட்சி 2024 பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான பணிகளை தொடங்கிவிட்டது.

தேர்தலை எதிர்கொள்ள வசதியாக அனைத்து மாவட்டங்களுக்கும் மாநில தலைவர்
அண்ணாமலை
சுற்றுப்பயணம் செய்து சரியாக செயல்படாத மாவட்ட தலைவர்களை கண்டறிந்து 29 மாவட்டங்களுக்கு சுறுசுறுப்பான புதிய மாவட்ட தலைவர்களை நியமித்தார்.

அதே போல் மாநில நிர்வாகிகளிலும் சிலருக்கு பொறுப்புகள் மாற்றப்பட்டது. புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் உள்பட பலருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன.

கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களில் வட மாநிலங்களில் பெருவாரியான இடங்களை கைப்பற்றியும் தமிழகத்தில் ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.

எனவே தமிழகத்தின் மீது தனிக்கவனம் செலுத்த டெல்லி மேலிடம் முடிவு செய்தது. மேலிடத்தின் நேரடி செயல் திட்டப்படியே
அண்ணாமலை
மாநில தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையில் சட்டமன்ற தேர்தலில் 4 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றது பா.ஜனதாவினருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.

எனவே அடிமட்ட அளவில் கட்சி பணியை தீவிரப்படுத்தும்படி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக மோடி அரசு தமிழ் நாட்டில் செயல்படுத்தி உள்ள திட்டங்கள் பற்றி மக்கள் மத்தியில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளும்படி அண்ணாமலை கூறி உள்ளார்.

மொத்தம் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் 25 தொகுதிகளை குறி வைத்து தேர்தல் வியூகம் வகுக்கப்படுகிறது.

ஏற்கனவே 4 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்று இருக்கும் தொகுதிகள் அடங்கிய பாராளுமன்ற தொகுதிகளை நிச்சயம் கைப்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக மதுரையில் நாளை (10ந் தேதி) ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நடக்கும் கூட்டத்தில் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி செயல்திட்டம் வகுத்து கொடுக்கப்படுகிறது.

ஏற்கனவே மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்தி இருக்கும் திட்டங்கள் பற்றி தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்களில் பிரபலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.