`கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ வெளியாகி 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது செம ஃப்ரெஷ்ஷாக மிளிரும் படமும்… அதன் பாடல்களுமாக நினைவுகளை இங்கே பகிர்கிறார் படத்தின் இயக்குநரான ராஜீவ்மேனன்.
”இப்ப படங்கள் டி.வி.க்களில் வந்துட்டு இருக்கறதால, அப்போதைய படங்கள் காலம் கடந்தும் பேசப்படுகின்றன. ரசிக்கப்படுகின்றன. ஒரு பெரிய ஹிட் வரணும்னா, படம் ஃபேமிலி ஆடியன்ஸிற்கானதா இருக்கணும். ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ல ஒரு குடும்பத்தோட மதிப்பு, ஒரு நாட்டோட மதிப்புனு எமோஷனலான விஷயம் எல்லாம் கலந்து இருக்கும் போது அதற்கு வரவேற்பு இருக்கும். ஒரு குடும்பத்தோட பிரச்னைனா அது மகாபாரத்துலேயும் இருக்கு, ராமாயணத்துலேயும் இருக்கு. படத்துல நடக்குற விஷயங்கள் இந்தக் காலகட்டத்துக்கும் பொருத்தமா இருக்கு. படத்தை இப்போ பார்க்கும்போது கனமான மம்முட்டி சார், அஜித் சார், தபு, ஐஸ்வர்யாராய்னு ஒரு கனமான ஸ்டார் காஸ்ட் தெரியும். ஆனா, அப்ப மம்முட்டியைத் தவிர யாரும் ஸ்டார் ஆகல.
இதுல நடிச்சிருக்கற ஒவ்வொரு நடிகர்களுக்கு பதிலா இன்னொருத்தர்தான் முதலில் நடிக்க வைக்கறதா கதை விவாதத்துல இருந்தது. ஐஸ்வர்யாராய்க்கு பதிலா மஞ்சு வாரியார்தான் நடிக்க வேண்டியது. தபுக்கு பதிலா சௌந்தர்யா.. இப்படி நடிச்சிருக்க வேண்டியது. பார்த்திபன் நடிக்க வேண்டியது. சந்தர்ப்ப சூழலால் தான் இப்ப உள்ள நடிகர்கள் அமைந்தார்கள். தயாரிப்பாளர் தாணு சாரும் நானும் அஜித் சாரை முதலில் பார்க்கப் போகுறப்ப அவருக்கு ஆபரேஷன் பண்ணி, ட்ரீட்மென்ட்ல இருந்தார். ஐஸ்வர்யாராய் ஒரு நல்ல நடிகையாகணும்னு ஆசையில கதாபாத்திரத்தின் தன்மையை முழுமையா உள்வாங்கி நடிச்சாங்க. ஒரு ஸ்டார் ஆகணும்னு அவங்க நினைச்சு நடிக்கல. ‘மின்சார கனவு’ல அவங்க நடிக்க வேண்டியது. ஆனா, ‘இருவர்’ல அவங்கள நடிக்கச் சொல்லிட்டேன்.
இதுல மம்முட்டி சார் ரோல்தான் தனித்துவமானது. இந்த கதையைக் கேட்டபிறகு, பண்றேன்னு சொல்லி வந்தார். படத்துல இருந்த அத்தனை பேரும் நான் எழுதின விஷயங்களைவிட ஒரு படி மேல… திரையில கொண்டு வந்தாங்க. முதல் நாள் ஷூட்டிங் நல்லா ஞாபகமிருக்கு. காரைக்குடியில் ஒரு கோவில் முன்னாடி, எல்லார் காம்பினேஷனிலும் எடுத்தோம். நான் ‘பம்பாய்’ படத்துக்கு ஒளிப்பதிவு பண்ணும் போது சுஜாதா சார் நட்பு கிடைச்சது. அவரை மாதிரி ஆள் வர்றது அரிது. விஞ்ஞானம், ஆன்மீகம், நகைச்சுவை, இலக்கியம்னு எல்லாத்திலும் அசத்துவார். அவர்தான் எனக்கு ஆழ்வார்கள், தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்தினார்.
இந்த படத்துக்கு ஒன்றரை வருஷம்கிட்ட கம்போஸிங் வேலைகள் நடந்துட்டு இருந்துச்சு. அப்ப ரஹ்மானும் ரொம்ப பிஸியா இருந்தார். ‘பம்பாய்’ல அவர் பின்னணி இசையில செம ஸ்கோர் பண்ணியிருந்தார். கர்னாடிக் பின்னணியில் ஒரு ஒர்க் பண்ணணும் என்கிற ஐடியா அவருக்கு இருந்தது. ‘மின்சார கனவு’ல முழுக்க வெஸ்டர்ன் பண்ணியிருந்ததால, இதுல பாரதியார் பாடல்கள் வச்சு கர்னாடிக்கா போயிடலாம்னு முடிவு பண்ணினோம். முதல்ல பாரதியார் கவிதைகளுக்கு இசையமைக்கறப்பதான் ‘சந்தன தென்றல்..’ ட்யூன் வந்தது. சங்கர் மகாதேவனை பாட வச்சோம். ஆனா, அதுக்கு முன்னாடி ‘சங்கமம்’ படம் மூணு வருஷமா வெயிட்டிங்ல இருந்ததால ‘வராக நதிக் கரையோரம்’ அவருக்கு முதல் பாடலா வந்தது.” என்கிறார் ராஜீவ்மேனன்.