3 தொடர் அரைசதம், 3வது வீரர் சாதனை… கான்வே வெற்றிடத்தை நிரப்பியது எப்படி?

Devon Conway Tamil News: மேத்யூ ஹைடன், ஷேன் வாட்சன், டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கல்லம், முரளி விஜய், ஃபாஃப் டு பிளெசிஸ் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதுமே வலுவான தொடக்க ஆட்டக்காரர்களை கொண்ட ஒரு அணியாகவே இருந்துள்ளது. நடப்பு தொடரிலும் அதுபோன்ற தரமான தொடக்க வீரர்களை அந்த அணி அடையாளப்படுத்தும் என பலரும் சில வீரர்களை குறிப்பிட்டு யூகித்தனர். அவர்களின் கணிப்பு சிறிய இடைவெளிக்கு பின் தற்போது தான் கைகூடியுள்ளது.

ஐபிஎல் தொடரில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி, இந்தாண்டில் நடந்த மெகா ஏலத்திற்கு பிறகு புதிய அணியை கட்டமைத்து களமிறங்கியது. 4 தொடர் தோல்வியை சந்தித்த அந்த அணி 5வது லீக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி முதல் வெற்றி பதிவு செய்தது. பின்னர் மும்பையையும், ஐதராபாத்தையும் நேற்று டெல்லியையும் சாய்த்து 4வது வெற்றியை ருசித்துள்ளது.

சென்னை அணியில் உருவெடுத்துள்ள புதிய ஜோடி…

சென்னை அணி நடப்பு தொடரின் சில போட்டிகளில் தோல்வி கண்டு சறுக்கலை சந்தித்த நேரம் அது. தொடக்க வீரர் உத்தப்பா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், அவரின் பார்ட்னர் ருதுராஜ் கெய்க்வாட் சரியான தொடக்கம் கிடைக்கமால் திணறி வந்தார். முதலிரண்டு ஆட்டங்களில் அவருடன் ஜோடி கண்ட நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வேயும் தடுமாற்றத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

தொடர் தோல்விகளும் அடுத்தடுத்த தோல்விகளும் சென்னை அணியை அதிகம் யோசிக்க வைத்தது. இதற்கிடையில், சாம்பியன் வீரர் பிராவோ காயம் காரணமாக ஓய்வுக்கு சென்றார். அந்த தருணத்தில் தனது திருமணத்தை முடித்த கையோடு அணியில் இணைந்த டெவோன் கான்வேக்கு ஆடும் லெவனில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தனது பார்ட்னர் ருதுராஜுடன் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்ட கான்வே தனது அதிரடியை தொடங்கி இருந்தார்.

டெல்லி அணிக்கு எதிரான நேற்றை ஆட்டத்தில் தனக்கு எதிராக வீசப்பட்ட பந்துகளை தும்சம் செய்த கான்வே, நடப்பு தொடரில் தனது 3வது தொடர் அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடியை கைவிடாத அவர் 49 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகளை விரட்டி 87 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். கான்வே – ருதுராஜ் ஜோடி 110 ரன்கள் சேர்த்தனர். முன்னதாக ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த ஜோடி 182 ரன்களை குவித்து இருந்தது.

இதற்கு முன் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் தொடக்க ஜோடியின் அதிகபட்ச ரன் குவிப்பு 181 ரன்கள் தான். இதை கடந்த 2020 ஆண்டில் ஷேன் வாட்சன்-ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் ஜோடி பதிவு செய்திருந்தது. அந்த பதிவை தற்போது கான்வே – ருதுராஜ் ஜோடி முறியடித்து, அணியின் புதிய ஜோடியாக உருவெடுத்துள்ளது.

வெற்றிடத்தை நிரப்பிய கான்வே…

சென்னை அணி நிர்வாகம் அதன் வீரர்களுக்கு எப்போதுமே ஒரு அரணாக இருந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதேபோல் தான் கான்வே மீதும் அதீத நம்பிக்கை வைத்தனர். தற்போது அந்த நம்பிக்கை பலன் கிடைத்துள்ளது என்றே மெச்சிக் கொள்ளலாம். சில சறுக்கலுக்கு பின் எழுச்சி பெற்றுள்ள டெவோன் கான்வே, நடப்பு தொடரில் 3 அரைசதங்களுடன் 228 ரன்கள் குவித்துள்ளார்.

மேலும், சென்னை அணிக்காக தொடர்ச்சியாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அரைசதங்கள் அடித்த மூன்றாவது வீரர் என்கிற பெருமையும் அவர் பெற்றுள்ளார். 2020 சீசனின் முடிவில் கெய்க்வாட் முதல் வீரராக இருந்தார். அதே சமயம் டு பிளெசிஸ் கடந்த சீசனில் சிறப்பாக விளையாடினார்.

கான்வே, 2021 ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் ரூ.50 லட்சம் அடிப்படை விலையில் நுழைந்தார். ஆனால் அவரை எந்த அணியும் வாங்க முன் வரவில்லை. நான்கு நாட்களுக்குப் பிறகு, கிறிஸ்ட்சர்ச்சில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் 4-வது வீரராக களமிறங்கிய அவர் ஆட்டமிழக்காமல் 59 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார். அந்த நேரத்தில் இந்திய ஆஃப் ஸ்பின்னர் ஆர் அஷ்வின், “ஏலத்திற்கு டெவன் கான்வே 4 நாட்கள் தாமதமாக வந்துள்ளார், ஆனால் என்ன ஒரு நாக்.” என்று ட்வீட் செய்திருந்தார்.

இந்த சீசனில், சென்னை அணி அவரை ரூ.1 கோடிக்கு எடுத்தது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், கான்வே நியூசிலாந்து அணிக்காக ஒரேயொரு டி20 ஆட்டத்தில் தான் விளையாடியுள்ளார். அந்த அணியில் பெரும்பாலும் அவர் 3 அல்லது 4 இடத்தில் தான் பேட்டிங் செய்ய களமிறங்குவார்.

தற்போது ஐபிஎல்லில் தனக்கென ஒரு தனிப்பாணியை அமைத்துக்கொண்ட அவரின் தனிச்சிறப்பு சுழற்பந்து வீச்சாளர்களை எளிதாக எதிர்கொள்வதுதான். நேற்றை ஆட்டத்தில் கான்வே டெல்லி அணியின் சுழல் தாக்குலை நொறுக்கி அள்ளினார். டெல்லி அணி வெற்றியை ருசித்த போதெல்லாம் அந்த அணியில் ஆட்டநாயனாக தேர்வு செய்யப்பட்ட சைனாமேன் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவின் பந்துவீச்சை சிதறடித்தார். முன்னணி பேட்ஸ்மேன்கள் பலரும் திணறி அவரின் சுழல் பந்துகளை கான்வே சுழற்றி சுழற்றி அடித்தார். அவரின் அதிரடியால் மைதானமே கான்வே… கான்வே… என இடி இடித்தது.

கடைசி வரை விக்கெட் வீழ்த்தாத குல்தீப் 43 ரன்களை வாரிக்கொடுத்தார். இதேபோல் அந்த அணியின் மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேலும் கான்வேயின் அதிரடி வலையில் சிக்கிக்கொண்டார். அவரின் பந்துகளையும் கான்வே பவுண்டரி கோட்டிற்கு ஓட விட்டு இருந்தார். மேலும், மிட்செல் மார்ஷ், “லார்ட்” தாக்கூர் போன்றோரும் கான்வேயின் அதிரடியில் இருந்து தப்பவில்லை.

சொந்த நாட்டு அணியிலும் இடம்பிடிக்க வாய்ப்பு

சென்னை அணியின் நிர்வாக திறனாலும், கேப்டன் தோனியின் வழிநடத்துததாலும் அந்த அணி தரமான வீரர்களை கிரிக்கெட் உலகிற்கு அறிமுக செய்து கொண்டு இருக்கிறது. தவிர, ஃபார்ம் அவுட் என கூறி ஒதுக்கப்பட்ட பல வீரர்களையும் பட்டை தீட்டிய பாக்கியம் அந்த அணிக்கு உண்டு. அவ்வகையில், சென்னை அணி அறிமுகம் செய்துள்ள புதிய திறனாக டெவன் கான்வே உள்ளார்.

கான்வே நியூசிலாந்து அணியில் விளையாடிய அனுபவ வீரராக இருந்தாலும், அவரின் திறனை சென்னை அணி தான் பட்டைய தீட்டி இருக்கிறது. தற்போது சென்னை அணியில் அசைக்க முடியா தொடக்க வீரர் எனும் அந்தஸ்தை பெற்றுள்ள அவர் விரைவிலே நியூசிலாந்து அணியிலும் முக்கிய இடத்தை பிடிப்பார் என்பதில் ஐயமில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.