62 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்-திரளான பக்தர்கள் பங்கேற்பு !

தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான குத்தாலம் ஸ்ரீ அரும்பன்னவன முலையம்மை சமேத ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் தருமபுரம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர்கள் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் சுமார் 1,500  ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும், சமயக்குரவர்கள் மூவராலும்  பாடல்பெற்றதுமான அரும்பன்னவன ஸ்ரீ முலையம்மை சமேத ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் 1960 -ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பின்னர் தற்போது அன்பர்கள் உதவியுடன் ஆலயத்தில்  திருப்பணிகள் செய்து புதுப்பித்து கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வந்தன. திருப்பணிகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு நேற்று (8.5.2022) கும்பாபிஷேகம்  நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கடந்த 4 -ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. 8 கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, நேற்று காலை மஹா பூர்ணாகுதியுடன் தீபாராதனை செய்யப்பட்டது. யாகசாலையில் வைத்துப் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தக் கடங்கள் தருமபுர ஆதீனம் 27 -ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் முன்னிலையில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கருவறை கோபுரங்கள், ராஜகோபுரம், அம்பாள், முருகன், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளின் கோபுரங்கள், பரிவார தெய்வங்களின் சந்நிதி கோபுரங்கள் ஆகியவற்றின் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றிக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை  செய்யப்பட்டது.

கும்பாபிஷேகம்

நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன 27 -வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீன 24 -வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ, அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள், செங்கோல் ஆதீன மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ சிவபிரகாச தேசிக சத்தியஞான  பரமாசார்ய சுவாமிகள், மற்றும் 20,000 க்கும் மேற்பட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.