MI v KKR: புயலாக வீசிய பும்ரா; கம்மின்ஸ் மாஸ்டர் கிளாஸ்… பிளேஆஃப் ரேசில் நீடிக்கும் கொல்கத்தா!

புள்ளிப் பட்டியலின் அடியில் உள்ள அணிகள்தான் என்றாலும், வெற்றி தோல்வி பாதிக்காத யோக நிலையை மும்பை எட்டி விட்டிருந்தாலும், கேகேஆருக்கோ இந்த மோதல் கடைசி வாய்ப்பானது.

வெங்கடேஷைத் தவிர்த்து, ஃபயர் பவர் ஓப்பனர்கள் யாருமே இல்லை என்பதுவே தொடருக்கு முன்னதாக கேகேஆரின் பலவீனமாகக் கருதப்பட்டது. ஆனால், வெங்கடேஷும் இல்லை என்பதுதான் அவர்களது ரன்குவிப்புக்குத் தடா போட்டது. மிடில், டெத் ஓவர்களில் என்னதான் ரன்களை ஏற்றினாலும், தொடக்கத்தில் ஏற்பட்ட பின்னடைவை அவர்களால் சரி செய்யவே முடியவில்லை. எனவேதான், வென்றே ஆக வேண்டுமென்ற இப்போட்டியில் இதனைச் சரிக்கட்ட வேண்டுமென்பதே அவர்களது முதல் கவலையாக இருந்தது. ஆனால், சரியான தருணத்தில் மீண்டெழுந்த வெங்கடேஷ், அணிக்கான கிக் ஸ்டார்ட்டை தொடக்கத்திலேயே கொடுத்தார்.

பொதுவாக ஃபுட் வொர்க் இல்லை, யார்க்கர், ஃபுல் லெந்த் பந்துகள் அவரைத் திணறச் செய்யும், அளவுக்கதிமான அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடுகிறார் என பல விமர்சனங்களும் இதற்கு முன்னதாகவே அவரைத் தாக்கியிருக்கின்றன. சென்ற சீசனின் சென்ஷேசனாகக் கொண்டாடப்பட்டவர், இந்த சீசனில் ஃபார்மை இழந்து தடுமாறி வந்தார்.

MI v KKR

முன்னதாக மும்பைக்கு எதிரான அரைசதம் தவிர்த்துப் பார்த்தால், 11-க்கும் கீழாகவே அவரது ஆவரேஜ் வட்டமிட்டது. கேகேஆரும் அவரை எந்த நம்பிக்கையில் 8 கோடி கொடுத்துத் தக்க வைத்ததோ, அதே நம்பிக்கையோடே வெவ்வெறு பொஷிசனில் அவரை இறக்கி வெள்ளோட்டம் பார்த்தது. எதுவும் வேலைக்காகவில்லை. ஆனால், முக்கியமான இப்போட்டி விண்டேஜ் வெங்கடேஷை வெளியே கொண்டு வந்தது. பேஸ் அட்டாக்கர் என்பதாலும், களம், சுழல் பந்துக்குக் கைகொடுக்கும் என்ற பிட்ச் ரிப்போர்ட்டாலும், முருகன் அஷ்வினை இரண்டாவது ஓவரிலேயே ரோஹித் கொண்டு வந்தார். ஆனால் அவர் வீசிய கூக்ளிக்களையும் கணித்து பெரிய ஷாட்டுக்களாக்கினார் வெங்கடேஷ். ஆஃப் சைடின் ஆதிக்கக்காரர் என்பதால் அப்பக்கம் ஃபீல்டர்களை லோட் செய்தது மும்பை. கவுன்டர் அட்டாக்காக பெரிய ஷாட்டுகளால், வேகப்பந்து வீச்சிலும், ரன்கள் வந்து கொண்டே இருப்பதை அவர் உறுதி செய்தார். 24 பந்துகளில் வந்து சேர்ந்த அவரின் 43 ரன்கள்தான், பவர்பிளேயில் 64 ரன்கள் என்னும் நம்ப முடியாத தொடக்கத்தை கேகேஆருக்குக் கொடுத்தது.

அசத்தலான ஆரம்பம் வெங்கடேஷால் நேர்ந்தது என்றால் மிகப் பெரிய திருப்புமுனை, மும்பைக்கு கார்த்திகேயாவால் கிடைத்தது. ஸ்டாக் பாலைத் தவிர்த்தும் மிரட்டும் வகையிலுள்ள அவரது மற்ற வேரியேஷன்கள் எப்போதுமே பேட்ஸ்மேனைத் திணறடிக்கின்றன. இரண்டு ஓப்பனர்களையும் வெளியேற்றி, தொடக்கத்திலியே போட்டியைத் தங்கள் பாதையில் திருப்பியது கார்த்திகேயாதான்.

மறுபுறம், வெங்கடேஷ் தந்த அதிரடி ஆரம்பத்தை அப்படியே முன்னெடுத்துச் சென்றார் ராணா. கார்த்திகேயா ஓவரில் அவரடித்த இரண்டு அடுத்தடுத்த சிக்ஸர்கள்தான் விக்கெட் விழுந்ததால் மும்பை ஏற்றிய பிரஷரை அவர்கள் பக்கமே திருப்பியது. பொல்லார்டு வீசிய 13-வது ஓவரில் 17 ரன்களை விளாசி, 200 ரன்களை கேகேஆர் எட்டும் என்பதற்கு உறுதிப் பத்திரம் எழுதிக் கொண்டிருந்தார் ராணா. முருகன் அஷ்வின் எடுத்த ஸ்ரேயாஸின் விக்கெட், 200+ என்பதனை அவுட் ஆஃப் ஃபோகஸில் மாற்றியதென்றால், அந்தக் காட்சிகளை மொத்தமாகக் கலைந்து போகச் செய்தது பும்ராவின் ஸ்பெல்.

MI v KKR

மும்பை பௌலிங்கின் முதுகெழும்பு பும்ரா. மலிங்கா விட்டுச் சென்ற இடத்திலிருந்து, அணியை ஜெட் வேகத்தில் முன்னெடுத்துச் சென்று கொண்டிருந்த புல்லட். ஆனால், இந்த சீசன் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. பத்துப் போட்டிகளில், 5 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது மட்டுமில்லாமல், பவர் பிளேவுக்குப் பிந்தைய ஓவர்களில், 8.91 என்னும் எக்கானமியும் பழைய பும்ரா எங்கே என் தேட வைத்துக் கொண்டிருந்தது.

எனினும், விக்கெட்டுகள்தான் விழவில்லையே தவிர, ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இப்போட்டிக்கு முன்னதாக, பத்தில், ஏழில், எட்டுக்கும் குறைவான எக்கானமியோடு நம்பிக்கை அளித்துக் கொண்டுதான் இருந்தார். இருப்பினும், அவரது பந்து விக்கெட் வாடை பார்க்கத் தவறியதுதான் மும்பையை முடக்கிப் போட்டது.

இந்நிலையில்தான், கேகேஆருக்கு எதிரான இப்போட்டியில் பும்ராவின் பீஸ்ட் மோட் எரிமலைக் குழம்பாக வெளிப்பட்டது. பவர்பிளேவுக்குள் ஒரு ஓவர் மட்டும் கொடுத்துவிட்டு இறுதி ஓவர்களுக்காக அவரைப் பொக்கிஷமாக வைத்திருந்தார் ரோஹித். 15-வது ஓவரில் அவர் திரும்பிக் கொண்டு வரப்பட்ட போது, ராணாவும் ரசலும் போட்டியின் இறுதி ஓவர்களைத் தெறிக்கவிடக் காத்திருந்தனர். செட்டில் ஆன ராணாவையும், பௌலர்கள் மேல் விஷத்தைக் கக்கக் கூடிய ரசலையும், அந்த ஓவரில் வெளியேற்றிய போதே, மும்பையை பல அடிகள் முன்னெடுத்துச் சென்றார் பும்ரா.

ஆனால், மொத்தக் கேகேஆரையும் குழிதோண்டிப் புதைக்க வைத்தது அவரது ஸ்பெல்லின் மூன்றாவது ஓவர். அந்த ஓவரின் முதல் பந்தே ஷார்ட் பாலாகி ஜாக்சனை வெளியேற்றியது. வேட்டை அதோடு நிற்கவில்லை. கம்மின்ஸ் – கடந்த போட்டியில், இரக்கமே இல்லாமல், மும்பையைப் புரட்டிப் போட்ட சூறாவளி. எனவே கம்மின்ஸ் மற்றும் நரைன் இருக்கும் வரை, போட்டி எப்படியும் மாறலாம் எனக் கணிக்கப்பட, அந்த இருவரையுமே பும்ராவின் அடுத்தடுத்த பந்துகள் சுருட்டின.

MI v KKR

பேக் ஆஃப் டெலிவரி கம்மின்ஸை அனுப்ப, இன்னுமொரு ஷார்ட் பால் நரைனை அனுப்பியதோடு கேகேஆருக்கு முடிவுரை எழுதியது. மூன்று விக்கெட்டுகள் மெய்டன் கேகேஆரை ஸ்தம்பிக்கச் செய்தது. தனது ஸ்பெல்லின் கடைசி ஓவரிலும், அதுவும், போட்டியின் 20-வது ஓவரிலும், ஒரு ரன்னை மட்டுமே கொடுத்தார் பும்ரா.

ஓப்பனிங்தான் பரிதாபம், மிடில் ஆர்டரும், டெத் ஓவர்களும், தாங்கள் ரன்வேட்டையாடும் கட்டம் என கேகேஆர் கருத, அதனை மாற்றி, பும்ராவின் அசாத்தியமான ஐந்து விக்கெட்டுகள் ஹாலும், 2.5 எக்கானமியும், 165 ரன்களுக்கு கேகேஆரை சுருட்டியது. இறுதி 6 ஓவர்களில், 29 ரன்கள் மட்டுமே வந்திருந்தன. அதில் 3 ஓவர்கள் பும்ரா வீசியவைதான்.

“10 போட்டிகளில், 5 விக்கெட்டுகள்தான் எடுத்திருக்கிறார், ஓய்வளித்து அவரை சர்வதேசப் போட்டிக்காகவாவது பாதுகாக்கலாமே” என்ற கருத்துகள் முன்னெடுக்கப்பட, ஒரே போட்டியில் எடுக்கப்பட்ட இந்த ஐந்து விக்கெட்டுகள், அவரது தன்னம்பிக்கை அளவுமானியை உயிர்க்க வைத்து உச்சத்தில் ஏற்றிவிட்டது. கம்பேக் என்றால், இப்படித்தான் இருக்க வேண்டுமென நிரூபித்துவிட்டார் பும்ரா.

166 என்பது இக்களத்தில் எட்டக் கூடியதென்பதால், மும்பை அணி சுலபமாக வெல்லுமென அனுமானிக்கப்பட்டது. அதுவும் போன போட்டியில் ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித், கடைசி 18 ஐபிஎல் போட்டிகளாக வராமல் உள்ள அவரது ஐபிஎல் அரைசதமும் வந்து சேரும் என நினைக்க வைத்தார். ஆனால் நடந்தது வேறு. ரோஹித் சந்தித்த சவுத்தியின் முதல் ஓவரின் கடைசி டெலிவரியே, எட்ஜாகி கீப்பர் கேட்ச் ஆனது. பெயருக்குத்தான் கீப்பர் கேட்சே ஒழிய, அது ஃபர்ஸ்ட் ஸ்லிப் அளவிற்கு நகர்ந்து சென்ற பந்துதான். ஜாக்சனின் அதிவேக செயல்பாடு, கேகேஆருக்கு விக்கெட் பரிசளித்தது.

ரசலின் வேகத்தில், திலக்கும் தவறான ஷாட்டால் கேட்ச் கொடுத்து வெளியேற, இரண்டு விக்கெட்டுகளோடு வெறும் 37 ரன்கள் மட்டுமே வந்து சேர்ந்தது. 16 டாட் பால்களை கேகேஆர் இந்தக் கட்டத்தில் வீச, மும்பைக்கு அழுத்தம் ஏற்றியது. வருண் – நரைனைக் கொண்டு ஸ்பின் பாதைக்கு மாறி, மேலும் சில விக்கெட்டுகளை வீழ்த்த ஸ்ரேயாஸ் முயன்றார்.

MI v KKR

பவர்பிளேயில் செய்யப்பட்ட தவற்றை, தவறியும் செய்யவில்லை, இஷான் – ரமண்தீப் கூட்டணி. விக்கெட்டுகளுக்கிடையே ஓடி, ரன்கள் சிங்கிள்களாகவாவது வந்து கொண்டே இருப்பதை உறுதி செய்தனர். ரசலின் ரீ என்ட்ரி, இன்னுமொரு விக்கெட்டை விழச் செய்தாலும், டிம் டேவிட்டின் வரவு, மும்பைக்கு வலுசேர்த்தது. உண்மையில், இந்த சீசனில் சுழலுக்குத் திணறும் பொல்லார்டின் பலவீனம், டிம் டேவிட்டுக்கு முன்னதாகவே களமிறங்கும் வாய்ப்பை அளிக்கிறது. ரசலுக்கு எதிராக ஹாட்ரிக் பவுண்டரிகளோடு தொடங்கினாலும், நரைனிடம் பணிந்துதான் போக வேண்டியிருந்தது டிம் டேவிட். இறுதியில், அவரே வருணிடம் சரண்டரும் ஆக வேண்டியிருந்தது. போட்டியின் முக்கியத் திருப்புமுனையாக டிம் டேவிட்டின் விக்கெட் மாறியது. 79 ரன்கள் 46 பந்துகளில் தேவை என இலக்கு கடினமாக மாறத் தொடங்கிய நிலையில் விழுந்த இந்த விக்கெட் போட்டியை யூ-டர்ன் அடிக்க வைத்தது.

மும்பை கையில் வைத்திருந்த ஃபோகஸ் லைட் இஷான் பக்கம் திரும்பியது. அவரது வழக்கமான அதிவேக ரன்குவிப்பு இல்லையென்றாலும், நங்கூரமிட்டு மும்பையின் இன்னிங்க்ஸை மெல்லக் கட்டமைத்துக் கொண்டிருந்தார். நரைனது ஓவர்கள் முடிந்துவிட்ட நிலையில், வருணுக்கும் ஒரு ஓவர் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், அதனையும் கடந்து விட்டால் இறுதி ஓவர்களில் இஷான் அணியை மேலேற்றிட வாய்ப்பிருந்திருக்கும். ஆனால், அதற்குரிய சாத்தியக்கூறுகளை அடித்து நொறுக்கினார் கம்மின்ஸ்.

கடந்த காலங்களில் கம்மின்ஸ் பெரிய இன்னிங்ஸ்களை ஆடிய போட்டிகளில் முன்னதாக, அவரது பால் சோபித்திருக்காது. இப்போட்டியில் அதற்கு நேர்மாறாக நிகழ்வுகள் நடந்தன. டக்அவுட்டாகி வெளியேறியதை மொத்தமாக ஈடுகட்டிவிட்டது, கம்மின்ஸின் அந்த ஓவர். அவரது ஷார்ட் பாலுக்கு எதிரான இஷானின் புல் ஷாட், ரிங்குவிடம் கேட்சானது. மும்பையின் இரண்டு புள்ளிகள் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது இங்கேதான். அந்த ஓவரிலேயே, டேனியல் சாம்ஸ் மற்றும் முருகன் அஷ்வினின் விக்கெட்டுகளோடு, தங்களது வெற்றியை ஏறக்குறைய கம்மின்ஸ் உறுதிசெய்துவிட்டார். 52 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை, கேகேஆர் பதிவு செய்தது.

MI v KKR

ஒரு ஓவரில் அடுத்தடுத்து விழுந்த மூன்று விக்கெட்டுகள், இறுதி 4 ஓவர்களில் 59 ரன்கள் தேவை என்ற இடத்திலேயே போட்டி முடிவுக்கு வந்துவிட்டது. டிம் டேவிட்டோ இஷானோ நின்றிருக்கும் பட்சத்தில், கடைசி நிமிடத்தில் அதிரடி காட்டி, மும்பைக்கு வெற்றி முலாம் பூசியிருக்கலாம்.

பவர்பிளேயில் அதிகளவிலான டாட் பால்கள், இன்டென்ட் இல்லாமல் ஆடிய பேட்ஸ்மேன்கள், கேகேஆரின் அசத்தலான பந்துவீச்சு என எல்லாம் சேர்ந்து மும்பைக்கு முடிவுரை எழுதி விட்டது. 113-க்கு ஆல்அவுட் என்பது இலக்கை எப்படி எட்டுவது என்ற கேம் ப்ளானோடு அவர்கள் இறங்காததையே காட்டுகிறது.

கேகேஆருக்கோ, வெங்கடேஷ் ஃபார்முக்கு வந்திருப்பது, பவர்பிளே பரிதாபங்கள் முடிவுக்கு வந்தது, எதிரணியின் பார்ட்னர்ஷிப்கள் உருவாக உருவாக, பௌலர்கள் அதை உடைத்தது என நிறைய நல்ல விஷயங்கள் நடந்தேறின.

புள்ளிப் பட்டியலில் இரண்டு இடம் முன்னேறி, ப்ளேஆஃப் கனவை உயிர்ப்போடு வைத்துக் கொண்டுள்ளது கேகேஆர்‌.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.