நொய்டா:
உத்தரப்பிரதேசம் நொய்டாவில் ஷர்தா பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற பி.ஏ அரசியல் வகுப்புக்கான தேர்வில், ‘ஃபாசிசம், நாசிசம் மற்றும் இந்துத்துவா வலதுசாரி அமைப்புகளுக்கு இடையே நீங்கள் காணும் ஒற்றுமை என்ன?’ என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இந்த கேள்வித்தாளை மாணவர்கள் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்ட நிலையில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து பலரும் இந்த கேள்விக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த கேள்வி குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு (யூ.ஜி.சி) ஷர்தா பல்கலைக்கழகத்திடம் கேட்டுள்ளது.
‘பல்கலைக்கழக தேர்வில் கேட்கப்பட்டிருந்த ஒரு கேள்வி குறித்து நிறைய புகார் வந்துள்ளது. இது நம் தேசத்தின் ஒறுமைப்பாட்டை சிதைக்கும் வகையில் உள்ளது. அதுபோன்ற கேள்விகளை கேட்கக்கூடாது’ என யூ.ஜி.சி கூறியிருந்தது.
இதையடுத்து கேள்வித்தாளை தயார் செய்த ஆசிரியர் மீது விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை அப்பல்கலைக்கழகம் அமைத்துள்ளது.