சென்னை: தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த இத்துறைகளின் அமைச்சரான தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டம் – ஒழுங்கு நிலவரத்தை அதிமுக ஆட்சிக் காலத்துடன் ஒப்பிட்டு பட்டியலிட்டார். குறிப்பாக, அதிமுக ஆட்சியின் கடைசி ஓராண்டில் 12,74,036 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டன என்றும், திமுக ஆட்சியில் அது பெருமளவு குறைந்து 8,66,653 முதல் தகவல் அறிக்கைகள் மட்டுமே பதிவாகியிருக்கின்றன என்றும் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு பதிலளித்து துறையின் அமைச்சரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், அதிமுகவின் கடைசி ஆண்டு ஆட்சி காலத்துடன், நடப்பு திமுக ஆட்சிக் காலத்தின் ஓராண்டின் சட்டம் – ஒழுங்கு நிலவரத்தை ஒப்பிட்டுப் பட்டியலிட்டார். அதன் விவரம்:
> கடந்த மே 2020 முதல் ஏப்ரல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் 1,695 கொலைகள் நடந்ததாகவும், கடந்த ஓராண்டு காலத்தில் அது 1,558-ஆக குறைந்துள்ளது.
> அதே காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியில் 146-ஆக இருந்த கொள்ளைகளின் எண்ணிக்கை (Dacoity) தற்போது 103 ஆக குறைந்துள்ளது.
> கூலிப்படைகளின் அட்டகாசத்திற்கு இந்த அரசு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும் என்று கூறிய முதல்வர், கடந்த மே 2020 முதல் ஏப்ரல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் 30-ஆக இருந்த கூலிப்படைக் கொலைகளின் எண்ணிக்கை இந்த ஆட்சியில் அது 18-ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், கூலிப்படைகளின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
> அதிமுக ஆட்சியின் கடைசி இரு ஆண்டுகளில் 16 போலீஸ் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. அதில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவமும் ஒன்று. ஆனால், திமுக ஆட்சியில் அந்த நிலை ஏற்படவில்லை. எங்கும் எந்தச் சூழலிலும் துப்பாக்கிச்சூடு என்பது ஏற்படவே இல்லை .
> காவல் நிலையங்களில் ஏற்படக்கூடிய மரணங்களைப் பொறுத்தவரையில் தன்னிடம் உள்ள புள்ளி விவரங்களின்படி, 2017-ம் ஆண்டு 8 பேரும், 2018-ம் ஆண்டு 12 பேரும், 2019-ம் ஆண்டு 11 பேரும், 2020-ம் ஆண்டு 6 பேரும், 2021-ம் ஆண்டு 5 பேரும், 2022-ம் ஆண்டு இதுவரை 4 பேரும் உயிரிழந்துள்ளனர் என்றார்.
> அதிமுக ஆட்சியின் கடைசி ஓராண்டில் 12,74,036 முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் அது பெருமளவு குறைந்து 8,66,653 முதல் தகவல் அறிக்கைகள் மட்டுமே பதிவாகியிருக்கின்றன என்றால், இந்த ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருக்கிறது அல்லது முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.
> மாநிலத்தில் போக்சோ சட்டத்தின்கீழ் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் 2022 மார்ச் மாதம் வரை 4,496 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் 3,441 வழக்குகளில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
> பெண்களுக்கெதிரான குற்றங்களில் மானபங்கம் தொடர்பாக 1,053 வழக்குகளும், பெண் கடத்தல் தொடர்பாக 547 வழக்குகளும், பாலியல் பலாத்காரம் தொடர்பாக 416 வழக்குகளும், போக்சோ பாலியல் பலாத்காரம் தொடர்பாக 3,350 வழக்குகளும் தாக்கலாகியிருக்கின்றன.
> சாலைப் பாதுகாப்பில் இந்த அரசு மிக முக்கியக் கவனம் செலுத்தி வருகிறது. மரணங்கள் இந்த ஆட்சியில் குறைந்துள்ளது. அதிமுக ஆட்சியில் மரணத்தை ஏற்படுத்தும் 15,290 ஆக விபத்துகளின் எண்ணிக்கை தற்போது அது 14,203 ஆக குறைக்கப்பட்டுள்ளது.அதேபோல் 15,967 ஆக இருந்த விபத்து மரணங்கள், தற்போது 14,845-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.