பானாஜி: கோவாவில் பாஜ ஆட்சி நடக்கிறது. இதில், இம்மாநில முன்னாள் முதல்வரான ரவி நாய்க், தற்போது வேளாண் அமைச்சராக இருக்கிறது. இம்மாநிலத்தில் கடந்த பிப்ரவரியில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இதில், பாஜ வேட்பாளர்களை ஆதரித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் செய்தார். அப்போது நடந்த ஒரு சம்பவத்தை நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரவி நாயக் தெரிவித்தார். ‘பனாஜிக்கு பிரசாரம் செய்ய வந்த அமித்ஷா, குடிப்பதற்கு ஹிமாலயா கம்பெனி மினரல் வாட்டர் பாட்டில் கேட்டார். அது அங்கு கிடைக்கவில்லை. பனாஜியில் இருந்து 10 கிமீ தூரத்தில் உள்ள மபுசாவுக்கு போன் போட்டு, அந்த வாட்டர் பாட்டில்களை வாங்கி வந்து கொடுத்தோம். ஒரு பாட்டில் விலை 850 ரூபாய். நட்சத்திர ஓட்டல்களில் கூட ஒரு சாதாரண வாட்டர் பாட்டில் ரூ.150-160 வரை விற்கிறது. எனவே, நமது மாநிலத்தில் மலைகள் இருக்கும் இடத்தில் எல்லாம் ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டினால், இந்த தண்ணீரை எடுத்து வெளிநாடுகளுக்கு கூட விற்கலாம்,’ என்றார். ரூ.850 மதிப்புள்ள வாட்டர் பாட்டிலை அமித்ஷா வாங்கி குடித்ததாக நாயக் கூறிய போது, கூட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் வாயை பிளந்தனர்.