கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் மனைவி டோனா, ராஜ்யசபா உறுப்பினராக அறிவிக்கப்படலாம் என்ற தகவல் மேற்குவங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்ட இரு ராஜ்யசபா உறுப்பினர்களான நடிகை ரூபா கங்குலி மற்றும் முன்னாள் பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ்குப்தா ஆகியோரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்த பதவிகளுக்கான பிரபலங்கள் யார்? என்ற விவாதம் நடந்து வருகிறது. அந்த வகையில், பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் மனைவி டோனாவின் பெயர் அடிபடுகிறது. கடந்த 6ம் தேதி கங்குலியின் இல்லத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரவு உணவு சாப்பிட்டதை தொடர்ந்து, மாநில பாஜக வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன. மேலும், புகழ்பெற்ற ஒடிசி நடனக் கலைஞரான டோனா கங்குலி, கொல்கத்தாவில் நடந்த கலாச்சார நிகழ்ச்சியில் ஆடிய நடனத்தையும் அமித் ஷா பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாஜகவின் தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், ‘மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த டோனா கங்குலி போன்ற ஒருவர், குடியரசுத் தலைவரின் நியமன உறுப்பினராக ராஜ்யசபாவுக்கு சென்றால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். இருந்தும் இந்த விவகாரம் குறித்து ஊடகங்களிடம் பேசுவது சரியாக இருக்காது. மத்திய தலைமை பரிசீலித்து இறுதி முடிவு எடுக்கும். சவுரவ் கங்குலியே ராஜ்ய சபாவுக்கு சென்றாலும் மகிழ்ச்சியடைவேன்’ என்றார்.