கோவை: ‘அயன்’ பட பாணியில் போதைப்பொருளை வயிற்றில் மறைத்து வைத்து விமானத்தில் கோவைக்கு கடத்திவந்த உகாண்டா பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஷார்ஜா – கோவை இடையே ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது. இந்நிலையில், உகாண்டாவைச் சேர்ந்த சான்ரா நாண்டேசா (33) என்ற பெண் விமானம் மூலமாக கடந்த 6-ம் தேதி ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு போதைப்பொருள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து கோவை விமான நிலையம் வந்த அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அந்தப் பெண்ணின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது போதைப்பொருளை மாத்திரை கேப்சூலில் அடைத்து அதனை விழுங்கியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பெண்ணை கோவை அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் அனுமதித்தனர். அங்கு எனிமா அளித்து வயிற்றிலிருந்த கழிவுகளை வெளியேற்றினர்.
அதிலிருந்து கிடைத்த 81 கேப்சூல்களை ஆய்வு செய்ததில், அது மெத்தாம்பீட்டமைன் (Methamphetamine) எனும் போதைப்பொருள் என்பது தெரியவந்து. மொத்தம் 852 கிராம் கொண்ட அந்த போதைப்பொருளின் மதிப்பு ரூ.2.67 கோடி ஆகும். கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணை கோவை போதைப் பொருள் தடுப்புச் சட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் இன்று (மே 10) அதிகாரிகள் நேரில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அந்த பெண்ணை வரும் 23-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி லோகேஸ்வரன் உத்தரவிட்டார்.