சென்னை: ஆண்டுதோறும் சொத்துவரி உயர்த்தும் முடிவை தமிழகஅரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில், இனிமேல் ஆண்டுதோறும் சொத்து வரி உயர்த்துவது தொடர்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், ஆண்டுதோறும் சொத்துவரி உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று பதிவிட்டுள்ள டிவிட்டுகளில், ”தமிழகத்தில் அனைத்து நகர்ப்புறங்களிலும் சொத்து வரியை ஆண்டுக்கு ஒருமுறை உயர்த்த வகை செய்யும் சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படுகிறது. சொத்துவரி உயர்வு வீட்டு உரிமையாளர்களை மட்டுமின்றி வாடகைதாரர்களையும் கடுமையாக பாதிக்கும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சென்னை உள்ளிட்ட அனைத்து நகர்ப்புற பகுதிகளிலும் அண்மையில் தான் 200% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதையே செலுத்த முடியாமல் மக்கள் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், ஆண்டுக்கு ஆண்டு இத்தகைய சுமையை தமிழக மக்களால் சுமக்க முடியாது.
2017-18ஆம் ஆண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்ட போது அதைக் கண்டித்து இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று போராட்டம் நடத்தினார். அதற்கான காரணங்கள் இன்னும் அப்படியே இருக்கும்போது ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரியை உயர்த்துவது என்ன நியாயம்?
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரை (வாக்குறுதி 487) சொத்துவரி உயர்த்தப்படாது என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.
பொருளாதார நிலையை காரணம் காட்டி மக்களுக்கான உரிமைகளை மறுக்கும் அரசு வரியை மட்டும் உயர்த்துவது சரியா?
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் நிலை குலைந்து போயிருக்கிறார்கள். அவர்கள் மீது மேலும், மேலும் சுமைகளை சுமத்தக்கூடாது.
அதனால், ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரியை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.