சென்னை : தமிழகம் மற்றும் ஆந்திராவில் கோடைக்கால கடும் வெப்பத்தை தணித்துள்ள ‘அசானி’ புயல், இன்று முற்பகலில் ஆந்திராவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தமானுக்கு மேற்கே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, படிப்படியாக வலுப்பெற்று, அசானி புயலாக மாறியுள்ளது.
இந்தப் புயல், தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவின் பெரும்பாலான கடற்பகுதிகளில் மிதமான மழையை கொடுத்துள்ளது.இந்த புயல் ஒடிசாவை நோக்கி செல்வதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால், நேரடியாக ஆந்திராவை நோக்கி வருவதாக, பிற வெளிநாட்டு வானிலை ஆராய்ச்சி அமைப்புகள்
தெரிவித்தன. இதன்படி, தமிழக வடக்கு கடலோரம், தெற்கு ஆந்திரா மற்றும் ஆந்திராவின் மத்திய கடலோர பகுதிகளை புயல் நெருங்கியுள்ளது.
தமிழகத்தில் மழை
இதனால், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், நேற்று வானிலை மாறியது. நேற்று முன்தினம் இரவு முதல், பல இடங்களில், விட்டு விட்டு மழை பெய்தது.
கோடைக் கால வெப்பநிலை மாறி, குளிர்காலம் போன்ற இதமான சூழல் ஏற்பட்டது. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், சாலைகளில் மழை நீர் தேங்கி, மழைக்காலம் போன்று காட்சி அளித்தது.
இந்நிலையில், சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘அசானி, தீவிர புயலாக ஆந்திரா கரையை நெருங்கி, பின் ஒடிசாவை நோக்கி திரும்பிச் சென்று வலுவிழக்கும்’ என கூறப்பட்டுள்ளது. ஆனால், மற்ற வானிலை ஆராய்ச்சி அமைப்புகளின் தகவல்களில், அசானி புயல் ஆந்திராவில் மசூலிப்பட்டினத்துக்கும், காக்கிநாடாவுக்கும் இடையே, இன்று முற்பகலில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தை ஒட்டிய ஆந்திர பகுதியான கூடூர், நெல்லுார் துவங்கி, சிராலா, ஓங்கோல், குண்டூர், விஜயவாடா, மசூலிப்பட்டினம், காவாலி, அமலாபுரம் மற்றும் விசாகப்பட்டினம் வரை, பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த, 10 ஆண்டுகளில் மே மாதம் உருவான ஐந்தாம் புயலாக அசானி உள்ளது. கடந்த, 2019ல் மே மாதத்தில், ‘பானி’ என்ற புயல் ஒடிசாவை தாக்கியது; 40 பேர் பலியாகினர். பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, 2020ல் உருவான ‘அம்பான்’ என்ற சூப்பர் புயல், மேற்கு வங்கத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு மே மாதம் உருவான ‘டவ்டே’ புயல், குஜராத்தில் கரை கடந்தது. இதனால், கோவா, குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த ஆண்டில் உருவான ‘யாஸ்’ என்ற இன்னொரு புயல், ஒடிசாவில் கரை கடந்து, வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது.இதையடுத்து, இந்த ஆண்டு மே மாத துவக்கத்தில் உருவாகியுள்ள ‘அசானி’ புயல், வட தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் மழையை பொழிந்து, இதமான வானிலையை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய நிலவரம் என்ன?
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு:தமிழகத்தில் சென்னை உட்பட சில இடங்களில், இன்று மிதமான மழை பெய்யும். சென்னையில் மேகமூட்டமாக காணப்படும். நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக ஊத்தங்கரையில், 5 செ.மீ., மழை
பெய்துள்ளது.மத்திய மேற்கு, வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், இன்று மணிக்கு 85 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். நாளை வடமேற்கு, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், மணிக்கு 75 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். இதனால்,
மீனவர்கள் அந்த பகுதிக்குச் செல்ல வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.