திருப்பதி:
ருது வேனியா நாட்டை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் கடந்த மார்ச் மாதம் இந்தியாவிற்கு சுற்றுலா பயணமாக இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தார்.
சொகுசு பஸ் மூலம் சென்னையில் இருந்து ஐதராபாத்திற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது பஸ் கண்டக்டர் அவரிடம் பயணச்சீட்டுக்கு பணம் கேட்டார்.
இளம்பெண்ணிடம் அவரது நாட்டு கரன்சி நோட்டுகள் மட்டும் இருந்தது. இந்திய பணம் அவரிடம் இல்லை.
இதனால் பஸ் கண்டக்டர் வெளிநாட்டு கரன்சி வாங்க முடியாது. பஸ்சில் இருந்து கீழே இறங்கும்படி தெரிவித்தார். இவற்றை பஸ்சில் இருந்து கவனித்த ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சாய்குமார் பயணச்சீட்டுக்கு தேவையான இந்திய நாட்டு பணத்தை கொடுத்து உதவி செய்தார். இதையடுத்து இருவரும் நண்பர்களாகினர்.
இதையடுத்து வெளிநாட்டு இளம்பெண் சாய்குமார் வீட்டிற்கு சென்றார். அங்கு சாய்குமார் வீட்டில் உள்ளவர்களிடம் வெளிநாட்டு இளம்பெண் குடும்பத்தில் ஒருவரைப் போல் பழகினார்.
இந்த நிலையில் வெளிநாட்டு கரன்சியை இந்திய நாட்டு பணமாக மாற்றி தருவதாக சாய்குமார் இளம்பெண்ணை தனது பைக்கில் அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் அவரது நண்பரான சையத் அகமது அபிப் பாஷாவையும் தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு வனப்பகுதிக்கு சென்றார்.
அங்கு வைத்து இளம்பெண்ணை இருவரும் பலாத்காரம் செய்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்து வந்த வெளிநாட்டு இளம்பெண் நெடுஞ்சாலைக்கு ஓடிவந்து அந்த வழியாக சென்றவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார்.
அவர்கள் நெல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாய்குமார் சையத் அகமது அபிப் பாஷா இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நெல்லூர் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து நீதிபதி சுமா தீர்ப்பு வழங்கினார்.
வெளிநாட்டு இளம்பெண்ணுக்கு உதவுவது போல் நடித்து அவரை பலாத்காரம் செய்த சாய்குமார், சையத் அகமது அபிப் பாஷா ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தார்.
இந்த வழக்கில் 57 நாட்களில் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.