ஆர்ஜே பாலாஜி குறிப்பிட்டு கிண்டலடித்த படம் 'குருவி'யா ?
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் மற்றும் பலர் நடிக்கும் 'நெஞ்சுக்கு நீதி' படத்தின் டிரைலர் நேற்று சென்னையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயன், ஆர்யா, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஆர்ஜே பாலாஜி, “உதயநிதியை எனக்கு 12 வருஷமா தெரியும். அவர் அப்ப நடிக்க வரலை, தயாரிப்பாளராதான் இருந்தாரு. அப்போ பேசின ஒண்ணு ஞாபகம் இருக்கு. ரொம்ப நேரம் நாங்க சினிமாவைப் பத்தி பேசிட்டிருக்கும் போது நான் கேட்டேன். என்ன உதய், நீங்க இவ்ளோ சொல்றீங்களே, எப்படி அந்தப் படத்தைத் தயாரிச்சீங்கன்னு ஒரு படத்தைப் பத்தி கேட்டேன்.
அவர் என் தோள்ல கை போட்டு, 'எனக்கும் ஒரு டவுட்டு இருந்தது. நானும் எடுத்தவர் கிட்ட போய் கேட்டேன். என்ன படம் சுமாரா இருக்கேன்னு கேட்டேன். அதற்கு அவர் இன்னொரு வாட்டி எடுக்கலாமான்னு சொன்னாரு. ஐயோ சார் ஆளைவிட்ருங்கன்னு வந்தேன்,” அப்படின்னு உதய் என் கிட்ட சொன்னாரு,” என்றார்.
ஆர்ஜே பாலாஜி பேசி முடித்ததும் அது என்ன படம் என்பதை பக்கத்தில் அமர்ந்திருந்த சிவகார்த்திகேயனிடம் கிசுகிசுத்தார் உதயநிதி ஸ்டாலின். ஆக, அது என்ன படம் என்பது ஆர்ஜே பாலாஜி, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும், அந்தப் படத்தை இயக்கியவருக்கும்தான் தெரிந்திருக்கும்.
பாலாஜி பேசும் போது உதயநிதி அப்போது நடிக்க வரவில்லை என்றார். உதயநிதி நாயகனாக நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படம் 2012ம் ஆண்டுதான் வெளிவந்தது. அதற்கு முன்பு அவர் தயாரித்த படங்கள் “குருவி, ஆதவன், மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு'. இவற்றில் 'ஆதவன், ஏழாம் அறிவு' சுமாரான படங்கள். 'குருவி, மன்மதன் அம்பு' தோல்விப் படங்கள். 'மன்மதன் அம்பு' கமல்ஹாசன் படம் என்பதால் சொல்லியிருக்க வாய்ப்வில்லை. எனவே, 'குருவி' படத்தைத்தான் சொல்லியிருக்க வேண்டும்.