மதுரை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறுவது தொடர்பாக மதுரையில் நடைபெற்ற பாஜக புதிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கடந்த வாரம் தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் மதுரை அழகர்கோவில் சாலையிலுள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். அமைப்புச் செயலர் கேசவவிநாயகம், மூத்த தலைவர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, பாஜக சட்டப்பேரவை தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக மேலிட இணை பார்வையாளர் சுதாகர்ரெட்டி, மாநில நிர்வாகிகள், 60 மாவட்ட தலைவர்கள், 60 மாவட்ட பார்வையாளர்கள், தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் காணொளி வாயிலாக பங்கேற்றார்.
இதில், நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற, கிளை அளவில் கட்சியை வலுப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுக்கு மூத்த தலைவர்கள் ஆலோசனை வழங்கினர். மோடி பிரதமராகி 8 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி மத்திய அரசின் திட்டங்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய 12 குழுக்கள் அமைக்கப்பட்டன. தமிழகத்தில் பாஜக பெருங்கோட்டங்களின் எண்ணிக்கையை 5-ல் இருந்து 8 -ஆக உயர்த்தி புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
பின்னர் தமிழக பாஜக பொதுச் செயலர் ராம ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றி பெறுவதே பாஜகவின் இலக்கு. அந்த இலக்கை அடைய என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டணி குறித்து விவாதிக்கப்படவில்லை. பாஜகவுக்கு திமுக பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. பாஜக நிகழ்ச்சிக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். கொடி ஏற்ற அனுமதி மறுக்கின்றனர். கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதை வேண்டும் என்றே தாமதப்படுத்துகின்றனர்.
மதுரையில் பாஜக பேனர்களை அகற்றியுள்ளனர். இதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அடக்குமுறையால் பாஜகவை ஒடுக்க முடியாது. தமிழகத்தில் திமுகவுக்கு என்ன உரிமை உள்ளதோ, அதை விட அதிக உரிமை பாஜகவுக்கு உள்ளது. பாஜக பல மாநிலங்களில் ஆளும் கட்சியாகவும், எதிர் கட்சியாகவும் இருப்பதை உணர்ந்து திமுக செயல்பட வேண்டும்.
நீட் தேர்வை ரத்து செய்ய திமுக உச்ச நீதிமன்றத்தை தான் நாட வேண்டும். நீட் விவகாரத்தில் விலக்கு கிடைத்தால் திமுகவின் வெற்றி என்றும், விலக்கு கிடைக்காவிட்டால் அதற்கு தமிழக ஆளுநர் தான் காரணம் என்று பிரச்சாரம் செய்ய திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்” என்று கூறினார்.
இந்த பேட்டியின் போது மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சரவணன், புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.