முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து 53 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையன், நகைகளை விற்க சென்ற போது நாகர் கோவில் போலீசாரிடம் சிக்கினான். பூட்டிய வீட்டிற்குள் நள்ளிரவில் ரகசியமாக நுழைந்த ராசாத்தி பட்டபகலில் பகிரங்கமாக சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு…
கேரளாவில் புரட்சிகர சோசலிஸ்டு கட்சியின் தலைவராக இருந்தவர் பேபிஜான் , இரு முறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். இவரது மனைவி அன்னம்மா. இவர்களுக்கு சொந்தமான வீடு கொல்லம் உபாசனா நகரில் உள்ளது. கணவர் பேபிஜான் மறைவிற்கு பின்னர் அன்னம்மா மட்டும் அந்த வீட்டில் வசித்து வருகின்றார்.
பேபிஜானின் மகன்ஷிபு பேபிஜான், இவர்,காங்கிரஸ் முதல் அமைச்சர் உம்மன் சாண்டியின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர். இவர் தனது பூர்வீக வீட்டிற்கு அருகிலேயே புதிதாக வீடு ஒன்றை கட்டி அங்கு குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கணவர் பேபிஜான் இறந்த நாளில் இருந்து, பகல் நேரத்தில் மட்டுமே பூர்வீக வீட்டில் வசிக்கும் அன்னம்மா, இருட்ட தொடங்கியதும் அந்த வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தனது மகனின் புது வீட்டிற்கு சென்று விடுவது வழக்கம் என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் பூர்வீக வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அன்னம்மா வீட்டிற்குள் சென்று பார்த்த போது, முதல் மாடியில் இருந்த பீரோவில் வைத்திருந்த 53 சவரன் நகைகளை கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக வீட்டிற்கு வந்த ஷிபு பேபிஜான், போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
விரைந்து வந்த போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடனும், அங்கு கைப்பற்றைப்பட்ட கைரேகைகளை கொண்டும் கொள்ளையனை தேடி வந்தனர். கேரள எல்லை பகுதி மற்றும் தமிழக பகுதிகளில் உள்ள காவல்துறையினருக்கும் இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் தகவல் அளித்தனர்.
இதற்க்கிடையே நாகர்கோவிலில் உள்ள நகை அடகுகடை ஒன்றிற்கு ஏராளமான நகைகளுடன் சந்தேகத்துக்கிடமான ஆசாமி ஒருவன் சென்றுள்ளான். தனது பெற்றோரின் நகைகளை விற்க வந்திருப்பதாக கூறியதால் , நகை அடகு கடை உரிமையாளர் , காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். நாகர்கோவில் போலீசார் விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரித்த போது அவனது பையில் மொத்தமாக 53 சவரன் நகைகள் இருந்தது. அவர் நாகர்கோவில் , மணிக்கட்டி பொட்டல் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்கிற ராசாத்தி ரமேஷ் என்பதும் , முன்னாள் அமைச்சர் பேபி ஜான் வீட்டில் கொள்ளையடித்தவன் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து கொல்லம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ராசாத்தி ரமேஷையும் , கைப்பற்றப்பட்ட மொத்த நகைகளையும் நாகர்கோவில் போலீசார் அவர்களிடம் ஒப்படைத்தனர் . ஏற்கனவே பாலக்காட்டில் ஒரு வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டு அங்குள்ள போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நிலையில், இரவு நேரத்தில் பூட்டப்பட்டு கிடக்கும் பேபிஜானின் வீட்டை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஒரு பகுதியில் கொள்ளையடிக்கச்சென்றால் பெண் போல பேச்சுக் கொடுத்து குடும்ப விவரங்களை எல்லாம் தெரிந்து கொண்டு தான் நோட்டமிட்ட வீட்டில் கைவரிசை காட்டுவதில் அவன் கில்லாடி என்பதால் போலீசார் கொள்ளையன் ரமேஷை ராசாத்தி ரமேஷ் என்று அழைக்கின்றனர்.