இளையராஜா விவகாரம்: கீ.வீரமணி, ஈவிகேஎஸ் மீது வழக்குப் பதிய உத்தரவு

பட்டியலின சமூகம் குறித்து இழிவாகப் பேசியதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்
மற்றும் மேடையில் அமர்ந்திருந்தவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜா குறித்து சாதி ரீதியாக பேசியதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது தாழ்த்தப்பட்டோர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. புரட்சி தமிழகம் அமைப்பின் நிறுவனரான ஏர்போர்ட் மூர்த்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏர்போர்ட் மூர்த்தி, “அம்பேத்கர்- மோடி என்ற பெயரில் வெளியாகி உள்ள புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருக்கிறார். மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு விட்டதாக இளையராஜா மீது பலர் வன்மமான கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.

image

அந்தப் புத்தகத்தில் அம்பேத்கரின் திட்டங்களை மோடி நடைமுறைப்படுத்தி வருகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தகத்தை படிக்காமல் சிலர் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசியிருப்பதாக நினைத்து இளையராஜாவை இழிவாக பேசி வருவது கண்டனத்துக்குரியது.

சமீபத்தில் ஈவி கே எஸ் இளங்கோவன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், தபேலா எடுத்து அடிக்கிறவன்லாம் இசையமைப்பாளர் ஆகிவிட முடியாது என சாதி ரீதியாக இளையராஜா குறித்து கருத்து தெரிவித்துள்ளார். பாஜக மற்றும் மோடியின் மீதுள்ள வெறுப்பை இளையராஜா மீது சிலர் காட்டி வருகிறார்கள். இதனால், சாதி ரீதியாக இளையராஜா குறித்து பேசிய இளங்கோவன் மீது தாழ்த்தப்பட்டோர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் அவரது வீட்டின் முன்பு சிறுநீர் கழிக்கும் போராட்டம் நடத்தப்படும்” என்று கூறினார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், பட்டியலின சமூகம் குறித்து இழிவாகப் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்மற்றும் மேடையில் அமர்ந்திருந்தவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரவு கடிதம் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இருவரும் அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.