புதுடெல்லி: உலகம் முழுவதும் டுவிட்டர் இன்று செயலிழந்த நிலையில், நாய் உட்கார்ந்து இருக்கும் படத்தை வெளியிட்டதால் பயனர்கள் பல்வேறு கிண்டல் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். உலகின் மிக பிரபலமான சமூக வலைதளமான டுவிட்டர், இன்று காலை உலகளவில் செயலிழந்தது. டுவிட்டர் செயலிழந்த போது அதன் முகப்பு பக்கத்தில் நாற்காலியில் நாய் ஒன்று அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி இருந்தது. ஆனால், டுவிட்டர் செயலிழப்புகான காரணத்தை அந்நிறுவனம் அறிவிக்கவில்லை. இருப்பினும், இதேபோன்ற தொழில்நுட்ப சிக்கலை இந்த ஆண்டு பிப்ரவரியில் டுவிட்டர் நிறுவனம் எதிர்கொண்டது. டெஸ்லா தலைவர் எலோன் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலருக்கு வாங்கிய பின்னர், தற்போது தொழில்நுட்ப பிரச்னையால் டுவிட்டர் தளம் முடங்கியது. சில மணி நேரங்கள் கழித்த பின்னர் மீண்டும் டுவிட்டர் தளம் செயல்படத் தொடங்கியது. தொடர்ந்து டுவிட்டர் பயனர்கள் வெளியிட்ட பதிவில், டுவிட்டர் வெளியிட்ட நாற்காலியில் அமர்ந்திருக்கும் நாயின் புகைப்படத்தைப் பகிர்ந்து கேலி, கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர். நாற்காலியில் அமர்ந்திருக்கும் இந்த நாய் படத்தை இன்னும் எவ்வளவு நேரம் பார்ப்பது? மிஸ்டர் எலோன் மஸ்க், உங்க கைக்கு வந்தும் அதே பிரச்னையா? என்றெல்லாம் ேகள்வி எழுப்பி டிரண்டிங் ஆக்கி வருகின்றனர்.