சென்னை: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும்போது, மாநில அரசின்பரிந்துரைப்படி, பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் நியமிக்கும் நடைமுறை இருந்தது.
இந்நிலையில், சமீபகாலமாக ஆளுநரே நேரடியாக துணைவேந்தர்களை நியமிக்கும் நடைமுறை உள்ளது. இதற்கு மாநில அரசு சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் குஜராத்தில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடமே உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்திலும் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் வகையில், பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, சென்னைப் பல்கலைக்கழகம் உட்பட 13 பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டு, சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியால் சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை, தமிழக அரசுக்கும் வழங்கும் சட்டத்திருத்த முன்வடிவை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, அறிமுகம் செய்தார்.
இந்நிலையில் சட்டப் பேரவையில் நேற்று தமிழ்நாடு டாக்டர்எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்த முன்வடிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார்.
அதற்கான நோக்க காரண விளக்க உரையில், குஜராத், தெலங்கானா, கர்நாடக மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தில் அரசின் அதிகாரம் குறித்தும், அதன் அடிப்படையில் தமிழக அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சட்டத்திருத்தம்
மேலும், கூட்டுறவு சங்கங்களின் முறையான ஆளுகையை உறுதி செய்யவும், அதன் மூலம் பொதுநலனைப் பாதுகாக்கவும், முறையான கட்டுப்பாடு, கண்காணிப்புக்கான சட்டத்திருத்த முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டது.
அதேபோல, கூட்டுறவு சங்கத்தில் கையாடல், மோசடியாக பணத்தை தக்க வைத்தல் போன்றவற்றுக்கு, பதவிக்காலம் முடிந்த பின் பெறப்படும் புகார்களின் அடிப்படையில், சங்கத்தின் நிர்வாகம் அல்லது பணியாளர்களுக்கு உடந்தையாக உள்ள வெளியாட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சட்ட முன்வடிவும் சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமியால் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த சட்டத்திருத்த மசோதாக்களை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக சார்பில், செல்லூர் ராஜு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சிறைவாசிகள் விடுவிப்பு
கள்ளச் சாராயக்காரர்கள், கணினிவெளி சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபசாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசைப்பகுதி நில அபகரிப்பாளர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கையை தடுத்தல் சட்டத்தின் 15-வது பிரிவு, மாநில அரசு எந்த நேரத்திலும், தடுப்புக் காவலில் உள்ள எவரையும் குறிப்பிட்ட காலத்துக்கு நிபந்னையின்றி அல்லது அந்த நபர் ஏற்கும் நிபந்தனையின் பேரில் விடுவிக்கவும், விடுவிப்பை ரத்து செய்யவும் வழிவகை செய்கிறது.
தற்போது, அந்த சிறைவாசிகள் ரத்த சொந்தங்களின் திருமணத்தில் பங்கேற்க, உடல் நலமின்மைக்கு சிகிச்சை பெற, நெருங்கிய உறவுகளின் இறப்பில் பங்கேற்க மாநில அரசுக்கு பல்வேறு முறையீடுகள் வந்துள்ளன.
ஆனால், நிர்வாக நடைமுறைகாரணமாக அந்த முறையீடுகளுக்கு உரிய நேரத்தில் தீர்வு காணமுடியவில்லை. இதைத் தவிர்க்கும் வகையில், மாவட்ட அளவிலான அதிகார அமைப்புக்கு, தற்காலிக விடுவிப்புக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் அளிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன் அடிப்படையிலான சட்ட முன்வடிவைஅமைச்சர் வி.செந்தில்பாலாஜி அறிமுகம் செய்தார்.