பொதுவாக ரீ மிக்ஸ் பாடல்கள், ஒரிஜினல் பாடல்கள் போல அமைவது இல்லை. ஒரிஜினல் பாடலை, நவீன வடிவத்தில் அளித்து ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொள்வது என்பது அபூர்வம்.
அப்படி ஓர் அனுபவம், ‘சாணி காயிதம்’ திரைப்படத்தில் ரசிகர்களுக்குக் கிடைத்தது.
செல்வராகவன் – கீர்த்தி சுரேஷ் இடையேயான உறவு குறித்து விவரிக்கையில் இடம்பெற்ற, ‘மலர்ந்தும் மலராத..’ என்ற பாடலின் நவீன வடிவம்தான் அது!
இது இன்றைய இளம் தலைமுறை இசை ரசிகர்களிடம், அப்பாடலை கொண்டு சேர்த்திருக்கிறது.
தவிர ஒட்டுமொத்த படத்தின் பின்னணி இசையும் ரசிகர்களால் பேசப்பட்டது.
இந்த பின்னணி இசையை அமைத்தவர், சாம் சி எஸ்.
‘விக்ரம் வேதா’ பின்னணி இசை அமைத்ததன் மூலம் திரையுலகில் விரல் பதித்த சாம் சி எஸ், தொடர்ந்து ‘அடங்க மறு’, ‘அயோக்யா’, ‘கைதி’ என பல படங்களில் தன் திறமையை வெளிப்படுத்தினார்.
அதுவும் பாடல்களே இல்லாத – படம் முழுதும் கிளைமாக்ஸ் போல காட்சிகள் அமைந்த கைதி படத்தில் இவரது பின்னணி இசை வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இது குறித்து சாம் சி எஸ், ”இயக்குநர் கதையை முதன் முறையாக விவரிக்கும் போதே பின்னணி இசை குறித்த குறிப்புகள் என் மனதில் தோன்றிவிடும். கதாபாத்திரங்கள், கள சூழல்கள், வசனங்கள், கதை நகரும் போக்கு எல்லாவற்றையும் தீர்மானித்துவிடுவேன். முக்கியமாக எங்கு இசை முழுவதுமாக மௌனிக்கப்பட வேண்டும் என்பதும் மனதில் தோன்றிவிடும். ஆம், அமைதியும் இசைதான்.
இப்படி படக்காட்சிகளை, துல்லியமாக அவதானித்த பிறகு, என்னுடைய இசைக் கோர்வையை தொடங்குவேன். இயக்குநர் – படக்குழுவினரின் கருத்துக்களையும் உள்வாங்குவேன்.
வித்தியாசமான ஒலி குறிப்புகள் மூலம் கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்குவேன். கதை, திரைக்கதை ஆகியவைதான் பின்னணி இசை எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.
படத்தில் இடம்பெறும் பாடல்களுக்காகவும் பிரத்யேக தேடல் இருக்கும். மாண்டேஜஸ் பாடல்கள் என்றாலும், அதிலும் ஒரு இசை சார்ந்த அனுபவம் பார்வையாளர்களுக்கு கிடைக்கவேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால், ரசிகர்களின் காதுகளில் ஒலி சப்தமாக சென்றடையாமல் நாதலயத்துடன் இனிய ஒலியாக சேரவேண்டும்” என்றார்.