பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மசூதிகளில் அஸான் எனப்படும் பாங்கு (தொழுகை அறிவிப்பு) ஒலிபெருக்கியில் ஒலிப்பதற்கு இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே ஒலியின் அளவு இருக்க வேண்டும் என அறிவுறுத்தியது. இதனை மீறியதாக 15-க்கும் மேற்பட்ட மசூதிகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்நிலையில் ஒலிபெருக்கியில் பாங்கு ஒலிக்கச் செய்வதற்கு போட்டியாக ஸ்ரீராம் சேனா அமைப்பினர் நேற்று அதிகாலை 5 மணிக்கு பெங்களூரு, மைசூரு, ஹுப்ளி, மங்களூரு, உடுப்பி உட்பட மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களில் பக்திப் பாடல்கள், சுப்ரபாதம், வழிபாட்டு பாடல்களை ஒலிபரப்பினர். மைசூருவில் உள்ள ஜெய ஆஞ்சநேயா கோயிலில் நடைபெற்ற பஜனையில் ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் பங்கேற்றார்.
ஒலிபெருக்கியில் பஜனை பாடல்கள் சத்தமாக ஒலிக்க செய்யப்பட்டதால் கோயிலின் முன்பு கூட்டம் கூடியது. இதையடுத்து அங்கு வந்த போலீஸார் ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதேபோல பெங்களூரு விவேக் நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் ஒலிபெருக்கியில் சுப்ரபாதம் பாடிய 30-க்கும் மேற்பட்ட ஸ்ரீராம் சேனா அமைப்பினரை போலீஸார் கைது செய்தனர்.