சென்னை:
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சென்னை அணுமின் நிலையத்தில் பிளம்பர், தச்சர் போன்ற சி பிரிவு பணிகளுக்குக் கூட இந்தி மொழியில் தேர்வும், நேர்காணலும் நடத்தப்படுவதையும், அதன் மூலம் உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்புகள் திட்டமிட்டு மறுக்கப்படுவதையும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் அம்பலப்படுத்தியிருந்தார்.
1978-ம் ஆண்டு கல்பாக்கம் அணு மின் நிலையம் தொடங்குவதற்கான தொடக்கநிலை பணிகளும், நிலம் கையகப்படுத்துதலும் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, சி மற்றும் டி பிரிவு பணிகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதிகள் எதுவும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.
கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அனைத்துத் தேர்வுகளும் தமிழ் மொழியில் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்பாக்கம் அணு மின்நிலையம் முன்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு எனது தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.