புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி புத்துயிர்பெற மூத்த தலைவர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கட்சியின் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் குஜராத், இமாச்சல் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு சில மாநிலங்களில் பேரவைத் தேர்தலும் 2024-ல் மக்களவை பொதுத் தேர்தலும் நடைபெற உள்ளன. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 வரை உட்கட்சி தேர்தல் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையில் 3 நாள் மாநாடு நடைபெறும் என காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே அறிவித்தது. இதில், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் மற்றும் அடுத்தடுத்து வரும் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்த சூழலில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதன் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், உதய்பூர் மாநாட்டில் (சிந்தன் ஷிவிர்) விவாதிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கட்சியின் அனைத்து அமைப்புகளின் பதவியிலும் பல்வேறு பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசும்போது, “கட்சிக்குள் உள்ள குறைகளை மூத்த தலைவர்கள் சுட்டிக்காட்டலாம். ஆனால், அது தன்னம்பிக்கை, மன உறுதியை சீர்குலைக்கும் வகையில் இருக்கக்கூடாது. கட்சியில் அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். அரசியல், பொருளாதாரம், சமூக நீதி, விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் கட்சி விவகாரம் ஆகிய 6 அம்சங்கள் குறித்து வரைவு அறிக்கை தாக்கல்செய்ய தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுவின் அறிக்கை பற்றி உதய்பூர் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
கட்சிக்கு புத்துயிரூட்டவும் ஒற்றுமையை உறுதி செய்யவும் உதய்பூர் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு மூத்த தலைவர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார்.