இசைஞானி இளையராஜாவின் சாதி குறித்து இழிவாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி. கே. எஸ். இளங்கோவன், மேடையில் இருந்த தி.க தலைவர் கி. வீரமணி உள்ளிட்டோர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.
இசைஞானி இளையராஜா பிரதமர் ஒரு புத்தகத்துக்கு அளித்த முன்னுரையில், மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தது, சமூக ஊடகங்களில் சர்ச்சையானது. இளையராஜாவின் கருத்தை பாஜகவினர் வரவேற்றாலும், பாஜக எதிர்ப்பாளர்கள் பலரும் சமூக ஊடகங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இளையராஜா, பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்ட விவகாரம் சர்ச்சையானது.
இந்த நிலையில், ஈரோட்டி நடந்த திராவிடர் கழக நிகழ்ச்சியில், பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இளையராஜாவின் சாதி குறித்து பேசியது பெரிதாக சர்ச்சை வெடித்தது.
அந்த நிகழ்சியில் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பணம், புகழ் வந்து விட்டால் நீ உயர்ந்த சாதி ஆகி விடுவாயா? சங்கராச்சாரியார் ஆக முயற்சி செய்கிறார் இளையராஜா என்று கடுமையாக விமர்சித்தார். இதற்கு, சினிமாவில் தலித் அரசியலைப் பேசி வரும் இயக்குனர் பா. ரஞ்சித், இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா என்று கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவிதார். அதே நேரத்தில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசும்போது, மேடையில் அமர்ந்திருந்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கை தட்டியதற்கும் கண்டனம் தெரிவித்தார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், இசைஞானி இளையராஜாவை சாதி ரீதியாக பேசிய விவகாரம் சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இளையராஜாவை சாதி ரீதியாகப் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது பட்டியல் இனத்தவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது . புரட்சி தமிழகம் அமைப்பின் நிறுவனர் ஏர்போர்ட் மூர்த்தி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இவர்கள், பாஜக -மோடியின் மீதுள்ள வெறுப்பை இளையராஜா மீது காட்டி வருகிறார்கள். சாதி ரீதியாக இளையராஜா குறித்து பேசிய இளங்கோவன் மீது தாழ்த்தப்பட்டோர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் அவரது வீட்டின் முன்பு சிறுநீர் கழிக்கும் போராட்டத்தை நடத்துவோம் என்று ஏர்போர்ட் மூர்த்தி எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் இளையராஜா குறித்து இழிவாகப் பேசிய பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் அவர் பேசும்போது மேடையில் அமர்ந்திருந்தவர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் சென்னை மாநகர காவல் துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த கடிதம் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் இருவரும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“