காந்திநகர்: குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. குஜராத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் தற்போதே காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் தஹோத் மாவட்டத்தில் ’சத்தியாகிரக பழங்குடியின பேரணியை’ தொடங்கி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வைத்தார். பின்னர் பேசிய அவர்; பழங்குடியின மக்கள் தங்கள் கடின உழைப்பால் சாலை, பாலம், கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகளை குஜராத்தில் உருவாக்கியுள்ளனர். இதனால் உங்களுக்கு என்ன கிடைத்தது. ஒன்றும் கிடைக்கவில்லை. நல்ல கல்வியையோ, ஆரோக்கியத்தையோ கூட தராமல் மோடி அரசு ஏமாற்றுகிறது. பிரதமர் மோடி இரண்டு இந்தியாவை உருவாக்கியுள்ளார் என்றும் ஒன்று பணக்காரர்களுக்கானது; மற்றொன்று ஏழைகளுக்கானது. ஏழைகளுக்குச் சொந்தமான நாட்டின் வளங்களை சில குறிப்பிட்ட பணக்காரர்களுக்கு பிரதமர் மோடி வழங்கி வருகிறார். இந்தியாவில் கொரோனாவால் 60 லட்சம் பேர் வரை இறந்திருப்பார்கள்; உண்மையான எண்ணிக்கை மறைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்களை காப்பாற்ற மோடி அரசு தவறிவிட்டது. பாஜக பழங்குடியினர் உரிமைகளை பறித்துள்ளது. உங்களுக்கான உரிமைகளை நீங்கள் கேட்டு பெற வேண்டும். அப்போதுதான் உங்களுக்கான உரிமை கிடைக்கும். வரும் குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.