டெல்லி பா.ஜ.க-வினர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசிடம் 40 கிராமங்களின் பெயர்களை மாற்றுமாறு கோரிக்கை வைத்திருந்தது. இது தொடர்பாக டெல்லி பா.ஜ.க தலைவர் ஆதேஷ் குப்தா கடந்த 28-ம் தேதி செய்தியாளர்களிடம், “முகலாயர்காலப் பெயர்கள் கொண்ட 40 கிராமங்களின் பெயர்களை மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, அகில பாரத இந்து மகாசபா மற்றும் சாந்த் மகாசபா தலைவர் சுவாமி சக்ரபாணி, டெல்லியின் பெயரையே `இந்திரபிரஸ்தா’ என்று மாற்ற வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை வலியுறுத்துவதாகத் தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், யுனெஸ்கோவால் உலகப் பாரம்பர்யச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட குதுப் மினாரை விஷ்ணு ஸ்தம்பமாக மாற்ற வேண்டும் என மஹாகல் மானவ் சேவா மற்றும் சில இந்து அமைப்புகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறியும் குதுப் மினார் முன்பு இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.