சென்னை: சட்டப்பேரவையில் நேற்று காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு,சட்டம்- ஒழுங்கு பாதுகாக்கப்பட்டதுடன், தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது. மதம், சாதிச் சண்டைகள், கட்டாயப் பஞ்சாயத்துஇல்லை. ஆளும் கட்சியின் தலையீடு அறவே கிடையாது.
2013-ல் காவல் துறைக்கு ஆன்லைனில் புகார் அளிக்கும்முறையை அறிமுகப்படுத்தினோம். ஆனால், கடந்த சில மாதங்களாக ஆன்லைன் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தமிழகத்தில் மக்கள்தொகைக்கு ஏற்ப காவலர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. அதை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு, ‘‘நாங்கள் சொன்னது உண்மை. அந்த வாக்குறுதியை நாங்கள் காப்பாற்றி இருக்கிறோம். பேரவை நிகழ்வுகள் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. அவற்றை முழுவதுமாகவும், குறைத்தும் வெளியிடுவது அவர்களின் விருப்பம்’’ என்றார்.
தொடர்ந்து பேரவைத் தலைவர் அப்பாவு பேசும்போது, ‘‘தற்போது கேள்வி-நேர நிகழ்ச்சிகள் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன’’ என்றார்.
தொடர்ந்து பேசிய பழனிசாமி, ‘‘ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவது என அனைத்து நிகழ்வுகளையும் தொடக்கம் முதல் இறுதி வரை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்’’ என்றார்.
அதற்கு பதில் அளித்த பேரவைத் தலைவர் அப்பாவு, ‘‘படிப்படியாக பேரவை நிகழ்வுகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்’’ என்றார்.