சந்தூர் இசை மேதை சிவ்குமார் ஷர்மா மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

மும்பை:
இந்தியாவின் மிகவும் பிரபலமான பாரம்பரிய இசைக்கலைஞர்களில் ஒருவரான பண்டிட் சிவ்குமார் சர்மா(84) மும்பையில் இன்று காலை கடும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி  அவர் உயிர் பிரிந்தது.
ஜம்முவில் 1938 ஆண்டு பிறந்த சிவ்குமார் சர்மா,  ஜம்மு மற்றும் காஷ்மீரின் நாட்டுப்புற இசைக்கருவியான சந்தூரில் இந்திய பாரம்பரிய இசையை வாசித்த முதல் இசைக்கலைஞர் ஆவார். மத்திய அரசு அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவித்தது.
புல்லாங்குழல் ஜாம்பவான் பண்டிட் ஹரி பிரசாத் சௌராசியாவுடன் இணைந்து  சிவ்குமார் சர்மா பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். 
அவரது மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சிவ்குமார் ஷர்மா மறைவை கேட்டு வருந்தம் அடைந்ததாகவும், அவரது இசை நிகழ்ச்சிகள் இந்திய பாரம்பரிய இசை ஆர்வலர்களை மயக்கும் என்றும் கூறியுள்ளார்.
பாரம்பரிய இசைக்கருவியான சந்தூரை அவர் பிரபலப்படுத்தினார். அவரது சந்தூர் இப்போது அமைதியாகி விட்டது, சிவ் குமார் சர்மாவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தமது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
பண்டிட் சிவ்குமார் சர்மா மறைவால்  நமது இசையின் கலாச்சார உலகம் பேரிழப்பை சந்தித்துள்ளது. உலக அளவில் சாந்தூரை பிரபலப்படுத்தினார். வரும் தலைமுறையினரையும் அவரது இசை கவரும் வகையில் அமைந்தது. 
அவருடனான எனது கலந்துரையாடல்களை நான் அன்புடன் நினைவில் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.