கொழும்பில் இருந்து, நேற்று (09) வட்டரெக்க சிறைச்சாலைக்கு, சிறைச்சாலை பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட புனர்வாழ்வளிக்கப்படுகின்ற கைதிகள் மீது, மாலபே தலாஹேன பிரதேசத்தில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 10 கைதிகள் உட்பட பல சிறைச்சாலை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.
அந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக சிறைச்சாலை பஸ்ஸில் இருந்த மேலும் 58 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த சுமார் 30 கைதிகள், பணி வசதி திட்டத்தின் கீழ் கொள்ளுப்பிட்டி சிலக் நிறுவனத்தில் 105 கைதிகளும் ராஜகிரியவில் உள்ள ஐகொனிக் நிறுவனத்திலும் பத்தரமுல்லையில் உள்ள மாகா நிறுவனத்திலும் பணியமர்த்தப்பட்டு மாலையில் அழைத்து வரப்பட்ட வேளையிலேயே இந்த தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேற்று மாலை நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதையடுத்து பணியமர்த்தப்பட்டிருந்த கைதிகள் மீண்டும் வட்டரெக்க சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட சந்தர்ப்பத்தில், தலாஹேன பகுதியில் சிறைச்சாலை பஸ்கள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து சிறைக் கைதிகள் பதற்றமடைந்து நிலையில் பஸ்ஸிலிருந்து இறங்கியுள்ளனர். அவ்விடத்தில் சிறைக் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் தாக்குதல்களுக்கு உட்டுத்தப்பட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நேற்று (09) நாட்டில் கலவரத்திற்கு சிறைக்கைதிகள் ஈடுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் சில செய்திகள் வெளியாகியுள்ளன. அவை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை எனவும் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை புனர்வாழ்வு நடவடிக்கையின் கீழ் கைதிகளை செயல்திறன் மிக்க தொழிலாளர்களாக மாற்றும் வேலைத்திட்டத்திற்கு இந்த கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இந்த கைதிகளுக்கும் நாட்டில் இடம்பெற்ற கலவரங்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று ஆணையாளர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சிறைக்காவலில் இருந்து தப்பிச் சென்ற 58 கைதிகள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், அவர்கள் மீது எந்த தாக்குதல்களையும் மேற்கொள்ளாது சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்குமாறும் சிறைச்சாலைகள் ஆணையாளர் உபுல்தெனிய கேட்டுக் கொண்டுள்ளார்.