“சிலரைத் திருப்திப்படுத்த அளவுக்கு அதிகமாக ஆன்மிகம் எனத் தம்பட்டம் அடிக்கவேண்டுமா அரசு?" -கீ.வீரமணி

தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்க தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், ஆதீனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர், தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசத்துக்கு அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் இத்தகைய நடவடிக்கை குறித்து, திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி அறிக்கை மூலம் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக வீரமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மன்னார்குடி ஜீயர் – அமைச்சர்களையும், எம்.எல்.ஏ-க்களையும் நடமாட விட முடியாது என்று பகிரங்கமாக சவால் விடுகின்றார் என்றால், இது 1971-ம் ஆண்டு ஆத்திக – நாத்திகப் பிரசாரத்தின் புதிய அவதாரம்தானே. தி.மு.க ஆட்சியின் முற்போக்குக் கொள்கைத் திட்டங்களை மிரட்டிப் பணிய வைத்து முடக்கும் ஒரு காவித் திட்டம்.

முதல்வர் ஸ்டாலின்

இதுபற்றிய அச்சுறுத்தல்கள், அவதூறுகள் கண்டு பின்வாங்கினால், எந்த ஒரு மாற்றமும், புரட்சிகரமான முன்னெடுப்புத் திட்டங்களும் வரும் நான்கு ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியும், இன்றைய முதலமைச்சர் அவர்களும் செய்யவே இயலாத அளவுக்கு ஆக்கவே இன எதிரிகள் துணிவார்கள். ஆனாலும், நடக்கக் கூடாதது – இப்போது நடந்துவிட்டது. இதனை எதிர்பார்க்கவில்லை. ஆன்மிகம் என்பதைவிட இதன் பின்னணியில் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ் என்ற அரசியல் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. மக்களாட்சியில் சில முடிவுகளை ஆட்சியாளர்கள் மறுபரிசீலனை செய்வது தவிர்க்க இயலாததுதான். ஆனால், அப்படிப்பட்ட மறுபரிசீலனைகள் அடிப்படை மனித உரிமைகளையும், சமத்துவ நெறிகளையும் பாதிப்பதாக அமைந்து விடக் கூடாது.

கீ.வீரமணி

மனிதர்களை தூக்கிச் சுமப்பதற்கு ஒரு விசித்திரமான புதிய வாதம் முன் வைக்கப்படுகிறது. தூக்குபவர்களே விரும்பி வந்துதான் தூக்கிச் சுமக்க முன் வருகிறார்களாம். இது அறிவுபூர்வமாகவோ, சட்டபூர்வமாகவோ ஏற்கத்தக்கதா? கைரிக்ஷாவை இழுத்தவர்கள் அவர்களாகவே விரும்பித்தான் ஓட்டுகிறோம் என்று கூறி, இன்று இழுத்தால் சட்டம் அனுமதிக்குமா? பெண் குழந்தைகளை கள்ளிப்பால் தந்து குடும்பத்தினர், ஏன் தாயுமே அழிக்க முன் வந்தால், சட்டமும் – அரசும் அனுமதிக்குமா? மனித உரிமை மலிவான விலைச் சரக்கா? இந்த அரசு சிலரைத் திருப்தி செய்வதற்காக அளவுக்கு அதிகமாக ஆன்மிகம், ஆன்மிகம் என்று தம்பட்டம் அடிக்கவேண்டுமா?

தந்தை பெரியார் சொன்ன ஒரு பழமொழிதான் நமக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. மாமிசம் சாப்பிடுகிறவன் என்பதற்காக, நான் எலும்புத் துண்டைக் கழுத்தில் போட்டுக் கொண்டு அலைய வேண்டுமா? என்பதுதான் அது” என வீரமணி தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.