சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை; 13-ம் தேதி முதல் மீண்டும் வெயில்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

சென்னை: சென்னைக்கு அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருக்கிறது, வரும் 13 ஆம் தேதி அசானி கரையை கடந்தவுடன் வெப்பநிலை அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய புயல் உருவாகியுள்ளது. அசானி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலால் ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதலே சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலையில் சாரல் மழையாக இருந்த நிலையில், காலை 9 மணி தொடங்கி அண்ணாநகர், வியாசர்பாடி, சைதாப்பேட்டை, ஆவடி, சேத்துப்பட்டு, அனகாபுத்தூர், மேடவாக்கம், ஈக்காட்டுதாங்கல், புரசைவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.

சென்னை தவிர்த்து வேலூர், சேலம்,திருச்சி, விழுப்புரம், திருவாரூர் உட்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மழை பெய்தது.

இந்தநிலையில் சென்னைக்கு அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருக்கிறது என தனியார் வானிலை கணிப்பாளரும், தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் எழுதி வருபவருமான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) May 10, 2022

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

சென்னைக்கு இன்னொரு மழைக்கு வாய்ப்பிருக்கிறது. அசானி புயல் மேலும் மேலும் வலுவிழந்து வட ஆந்திர கடற்கரையோரம் காக்கிநாடா – விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கிறது. இதனால் சென்னைக்கு இன்னொரு மழைக்கு வாய்ப்பிருக்கிறது.

வரும் 13 ஆம் தேதி அசானி கரையை கடந்தவுடன் வெப்பநிலை அதிகரிக்கும். நிலக்காற்று வலுபெறும். இதனால் வெப்பம் அதிகமாகும். எனவே அடுத்த இரு நாட்களுக்கு மழையை சென்னை மக்கள் அனுபவித்துக் கொள்ளுங்கள்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 7.30 மணி நிலவரப்படி மழையளவு: (மில்லி மீட்டரில்)

காட்டுப்பாக்கம் (வண்டலூர் அருகில்) 30
எண்ணூர் 18
கத்திவாக்கம் 15
தண்டையார்பேட்டை 13
மணலி 12
தரமணி 12
ராயபுரம் 11
நுங்கம்பாக்கம் 10
நந்தனம் 10
மடிப்பாக்கம் 10
அடையாறு பூங்கா 10

அசானி புயல் சின்னம் மச்சிலி-காக்கிநாடா இடையே நாளை கரையை கடக்கும். அப்போது மணிக்கு 80 கிமீ மணி வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் புயல் தனது வழித்தடத்தை மாற்றுகிறதா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும். ஆந்திரக் கடற்கரையைக் கடக்காமல் இன்னும் வளைந்திருப்பதைக் காட்டுகிறது.

இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.