சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்- மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேட்டி

சென்னை:
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை  மேம்படுத்துவது தொடர்பாக, சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவால் மற்றும் உயர் அதிகாரிகளுடன் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும்  மீன்வளம், கால்நடை பராமரிப்புத்துறை இணை மந்திரி டாக்டர் எல் முருகன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
 
ரூ.98 கோடி செலவில் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பல்வேறு வசதிகளுடன் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படவுள்ளது. குளிர்சாதன வசதியுடன் கூடிய பதப்படுத்தும் அரங்கம், ஐஸ் குடோன் உள்ளிட்டவை இங்கு ஏற்படுத்தப்பட உள்ளன. 
பல்வேறு வசதிகளை கொண்ட நவீன மீன்பிடி துறைமுகமாக இது உருவாக உள்ளது. மீன்பிடி துறைமுகத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்க தொழில் முனைவோருக்கு 60 சதவீத மானியத்துடன் கூடிய வாய்ப்புகளை ஏற்பாடு செய்து தரப்படும்.
இன்னும்  இரண்டு மாதத்தில் காசிமேடு துறைமுகத்திற்கான டெண்டர் விடப்படும். 2015-ம் ஆண்டில் இருந்து மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7,500 கோடி முதலீடாக ஒதுக்கப்பட்டுள்ளது. 
இதில் தமிழகத்திற்கு மட்டும் ரூ. 1000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப் பட்டிருக்கிறது. மீன்வளத்துறையில் இன்னும் பல மாற்றங்களை கொண்டு வருவதுதான் அரசின் நோக்கம். மீனவர்களின் பாதுகாப்பு தான் நமது பாதுகாப்பு, அதற்காக மத்திய அரசு தனி கவனம் செலுத்தும். 
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் கடல்பாசி பூங்கா ஏற்படுத்தப் படவுள்ளது. பெண்களுக்கு இந்த பூங்காவில் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கான இடம் இன்னும் 10 முதல் 15 நாட்களில் தேர்வு செய்யப்படும். 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.