புதுடெல்லி: சொகுசு வாழ்க்கையை தேடியும், வேலையில்லா திண்டாட்டம் காரணமாக கடந்த 6 ஆண்டில் 9 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாட்டு குடியுரிமையை பெற்று அங்கேயே செட்டில் ஆகியுள்ளனர். இதுதொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் வசிக்கும் செல்வந்தர்கள் பலர் தங்களது இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாடு சென்றுவிடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் தொழிலில் பாதுகாப்பின்மை, சொகுசான வாழ்க்கைத் தரத்தைத் தேடியும் வெளிநாடு சென்றுள்ளனர். படிப்புக்காக வெளிநாடு சென்றவர்களில் 70 முதல் 80 சதவீதம் பேர் இந்தியா திரும்பவில்லை. அவர்களுக்கு அங்கேயே வாழ வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால், அவர்கள் அந்நாட்டின் குடியுரிமையை பெற்றுவிடுகிறார்கள். இந்தியாவில் வேலையின்மை காரணமாக, பஞ்சாப், டெல்லி, அரியானாவில் உள்ள பெரும்பாலான மக்கள், கனடாவுக்கு குடிபெயர்கின்றனர். பீகார், கேரளா போன்ற மாநில மக்கள், வேலைவாய்ப்பை தேடி வளைகுடா நாடுகளுக்கு செல்கின்றனர்.இந்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி பார்த்தால் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ஒவ்வொரு நாளும் 350 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறக்கின்றனர். வேலையில்லாத் திண்டாட்டத்தாலும், வறுமையாலும் பாதிக்கப்பட்ட அவர்கள், வெளிநாடுகளுக்கு சென்று அங்கேயே செட்டிலாகிவிடுகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் கடந்தாண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை கிட்டத்தட்ட 6 ஆண்டில் ஏறக்குறைய ஒன்பது லட்சம் பேர் இந்தியக் குடியுரிமையை கைவிட்டனர். வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, மொத்தம் 1,33,83,718 இந்தியர்கள் தற்போது வெளிநாட்டில் வசிக்கின்றனர்.இந்திய குடியுரிமையை துறந்தவர்கள் தற்போது 106க்கும் மேற்பட்ட நாடுகளின் குடிமக்களாக மாறியுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டில், அதிகபட்சமாக 1.44 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை கைவிட்டனர். 2016ம் ஆண்டில் 1.41 லட்சம் பேரும், 2017ம் ஆண்டு 6.08 லட்சம் இந்தியர்களும் தங்கள் குடியுரிமையை கைவிட்டனர். இவர்களில் பெரும்பாலனோர் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு முதல், இந்திய குடியுரிமையை கைவிட்டவர்களில் 82 சதவீதம் பேர் மேற்கண்ட நான்கு நாடுகளின் குடியுரிமை பெற்றுள்ளனர். கடந்த 2017 முதல் 2021ம் ஆண்டுக்கு இடையில், 2,174 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை கைவிட்டு சீனாவிற்கு குடிபெயர்ந்துள்ளனர். அந்த நேரத்தில், 94 இந்தியர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர். நேபாள அரசு 134 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க முன்வந்துள்ளது.மறுபுறம், உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கடந்த 2016 முதல் 2021ம் ஆண்டுக்கு இடையில் மொத்தம் 5,891 வெளிநாட்டினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018 முதல் 2021ம் ஆண்டுகளுக்கு இடையில், இந்து, சீக்கியர், சீக்கியர்களிடமிருந்து குறைந்தது 8,244 குடியுரிமை விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், இவர்கள் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஜெயின் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, 10,635 இந்திய குடியுரிமை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதில் பாகிஸ்தானில் இருந்து 7,306. ஆப்கானிஸ்தானில் இருந்து 1,152 ஆகியவை அடங்கும் என்று தெரிவித்துள்ளது.விசாரிப்பு அதிகரிப்பு மோர்கன் ஸ்டான்லி வங்கி கடந்த 2018ம் ஆண்டு வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி பார்த்தால், 2014ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டுக்கு இடையில், 23,000 இந்திய மில்லியனர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி உள்ளனர். கடந்த 2020ம் ஆண்டில் சுமார் 5,000 இந்திய மில்லியனர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி, வெளிநாடுகளில் தொழிலை தொடங்கி உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்தில் இருந்து செயல்படும் மற்ற நாடுகளுக்கு குடியுரிமை மற்றும் விசா வழங்கும் சர்வதேச நிறுவனமான ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, குடியுரிமை விதிகள் பற்றி விசாரித்தவர்களில் கடந்த 2020ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021ல் இந்தியர்களின் எண்ணிக்கை 54 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.