புதுடெல்லி: டெல்லி ஷாகின் பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை நேற்று தொடங்கியது.
டெல்லியில் முதல்வர் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. எனினும் வடக்கு, தெற்கு, கிழக்கு டெல்லி மாநகராட்சிகள் பாஜக வசம் உள்ளன.
அண்மைகாலமாக டெல்லியின் 3 மாநகராட்சிப் பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிநடைபெற்று வருகிறது. அண்மையில் வடக்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஜஹான்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் அங்கு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தெற்கு டெல்லிமாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக ஷாகின் பாக் பகுதிக்கு புல்டோசர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர். அங்கு காவல் துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் அப்பகுதி மக்கள் வீதிகளில் அமர்ந்து புல்டோசர்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளும் ஆம் ஆத்மிகட்சியினரும் மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தடைபட்டது.
இதனிடையே தெற்கு டெல்லி மாநராட்சியின் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி மார்க்சிஸ்ட் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர். கவாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
தெற்கு டெல்லி மாநகராட்சி பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அவை கண்டிப்பாக அகற்றப்பட வேண்டும். அதிகாரிகள் சட்டத்தை தவறாக பயன்படுத்தினால் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகலாம்.
ஜஹான்கிர்புரி பகுதியில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டதால் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இப்போது கட்டிடங்கள் இடிக்கப்பட வில்லை. நடைபாதை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர் கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. அரசியல் கட்சி தரப்பில்மனு தாக்கல் செய்யப்பட்டிருக் கிறது. உச்ச நீதிமன்றத்தை அரசியல்களமாக்க முயற்சி செய்யக்கூடாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வரும் 13-ம் தேதி வரை தெற்குடெல்லி மாநகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி வட்டாரங்கள் கூறும்போது, ‘‘மே 9-ம் தேதிஷாகின் பாக், 10-ம் தேதி போதிதர்மா மந்திர், 11-ம் தேதி மெஹர்சந்த் மார்க்கெட், லோதி காலனி, சாய் மந்திர், 12-ம் தேதி இஸ்கான் கோயில் பகுதி, 13-ம் தேதி காதா காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டமிட்டுள்ளோம். எந்தவொரு சமூகத்தையும் குறிவைத்து ஆக்கிரமிப்புஅகற்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பாரபட்சமின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்று தெரிவித்தன.