நேற்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “அசானி” தீவிர புயல் இன்று (10.05.2022) காலை 08:30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று இரவு வரை வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக் கூடும். அதன்பிறகு வடக்குவடகிழக்கு திசையில் வடஆந்திரா -ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரக் கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும்.
இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.