சென்னை: தமிழகம் மீது மத்திய அரசு பாகுபாடோ, ஓரவஞ்சனையோ காட்டவில்லை என்று ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
‘துக்ளக்’ இதழின் 52-வது ஆண்டு நிறைவு விழா, சென்னை மியூசிக் அகாடமியில் நேற்றுமுன்தினம் (ஞாயிறு) நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
பாஜக, உயர் சாதியினர் கட்சி. இந்திக்காரர்களின் கட்சி.பணக்காரர்களுக்கான கட்சி. ஏழைகளுக்கு எதிரான கட்சி என தொடர்ந்து தவறாக சொல்லி வருகிறார்கள். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜகவினர் உரிய எதிர்வினை ஆற்றவில்லை. தற்போது நிலைமை மாறி வருகிறது.
மோடி ஆட்சியில் உலக அரங்கில் இந்தியாவைப் பற்றிய பிம்பம் மாறியிருக்கிறது. வெளிநாட்டினர் நம்மை உயர்வாக நினைக்கத் தொடங்கியுள்ளனர். டிஜிட்டல் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. ‘கரோனா சூழலிலும் இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த 2 ஆண்டுகளும் இந்த வளர்ச்சி வீதம் தொடரும்’ என்று ஐஎம்எஃப் போன்ற சர்வதேச அமைப்புகள் மதிப்பிட்டுள்ளன.
மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் பிரச்சினை என்று சொல்கிறார்கள். மத்திய அரசு ஓரவஞ்சனை காட்டுவதாக குற்றம் சாட்டுகின்றனர். அதுபோன்று தமிழகம் மீது மத்திய அரசு ஓரவஞ்சனையோ, பாகுபாடோ காட்டவில்லை.
தமிழகத்தில் இருந்து அதிக வரிவருவாய் மத்திய அரசுக்கு கிடைப்பதால் அதற்காக அதிக நிதி கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். வரிவிதிப்பின் அடிப்படை கோட்பாடு என்பது, வசூலாகும் பணத்தை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பதுதான். தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இருந்துதான் அதிக வரிவருவாய் கிடைக்கிறது. எனவே, தமிழக அரசு கொங்கு மண்டலத்துக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்க முடியமா? பிரிவினை மனோபாவம் இருப்பதால்தான் இதுபோன்று மத்திய அரசு மீது குற்றம்சாட்டுகின்றனர்.
மத்திய அரசு தமிழகத்துக்கு கடந்த ஜனவரி மாதம் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வளர்ச்சிக்காக ரூ.3 ஆயிரம் கோடியும், மருத்துவமனை உள்கட்டமைப்புக்கு ரூ.3 ஆயிரம் கோடியும் வழங்கியது. தமிழகத்தில் புதிதாக 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு நிதியுதவி அளித்துள்ளது. கோவை, திருப்பூர், மதுரை, திருநெல்வேலி உட்பட 9 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. 8 வழிச் சாலை திட்டம், ரயில்வே மேம்பாலம் என எண்ணற்ற திட்டங்களுக்கு தமிழகத்துக்கு நிதி வழங்கியுள்ளோம். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு (நிலை-1) ரூ.3,770 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி மீது பிரதமர் மோடி அதிக மதிப்பு வைத்துள்ளார். உலக அரங்குகளில் பேசும்போது திருவள்ளுவர், கணியன் பூங்குன்றனார், பாரதியார் போன்றோரின் படைப்புகளை மேற்கோள் காட்டி பேசுகிறார். இதனால், தமிழின் பெருமை உலக அளவில் செல்கிறது.
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக தமிழகத்துக்கு 2020-ல் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடியும், 2021-ல் ஒன்றரை லட்சம் கோடியும் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு மட்டுமே ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை உள்ளது. தமிழகம் மட்டுமின்றி, அனைத்து மாநிலங்களுக்கும் நிலுவை இருக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பெட்ரோலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர தமிழக அரசு சம்மதித்தால் அதை ஜிஎஸ்டி கவுன்சிலில் வைத்து கொண்டுவரவும் தயார்.
மத்திய அரசு இந்தியை திணிப்பதாக சொல்கிறார்கள். இந்தியை யாரும் திணிக்கவில்லை. இந்தியை படித்தாலோ, பேசினாலோ ஒன்றும் குறைந்துபோய்விட மாட்டோம். தமிழகத்தில் நல்லது நடக்க வேண்டுமானால் இங்கு பாஜக ஆட்சி அமைய வேண்டும். அதற்கு அனைவரும் உழைக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மோடியால் இந்தியாவுக்கு பெருமை
விழாவில் வாசகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பதிலளித்தார். அவர் கூறியதாவது:
மத்தியில் மோடி தலைமையிலான உறுதியான ஆட்சி மூலம் உலக அளவில் இந்தியாவுக்கு பெருமையும், மரியாதையும் கிடைத்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு அமெரிக்காவையே உலுக்கிவிட்டது. மத்திய அரசு முன்புபோல் இல்லை. இப்போது மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி திட்டம் மாபெரும் சாதனை. இந்திய அரசியல் சாசனப்பிரிவு 370 நீக்கம், முத்தலாக் தடை சட்டம், ராமர் கோயில் பிரச்சினைக்கு தீர்வு போன்றவை எல்லாம் மோடி அரசின் மிகப்பெரிய சாதனைகள். காங்கிரஸ் கட்சி குடும்ப கட்சியாக ஆகிவிட்டது. வெறும் மோடி எதிர்ப்பு அரசியல் வெற்றியைத் தேடித்தராது. குடும்ப கட்சியாகிவிட்ட திமுகவுக்கு இனி வளர்ச்சி இருக்காது. தமிழகத்தில் திமுக, அதிமுக இரு கட்சிகளையும் கையாண்டு பாஜக வளர வேண்டும்.
பாஜகவின் சாதனைகளை சொல்லும் அதேவேளையில், அதன் தோல்விகளையும் குறிப்பிட்டாக வேண்டும். இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது சரியல்ல. “இந்தி திணிப்பு நடக்கவில்லை, இந்தி படிக்க வேண்டும்” என்று பாஜக சொல்ல வேண்டும். மாநிலங்கள் மீது பாஜக ஓரவஞ்சனை காட்டுகிறது என்ற தவறான பிரச்சாரத்தை பாஜக முறியடிக்கவில்லை.
இவ்வாறு குருமூர்த்தி கூறினார்.