சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா- முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவை மண்டபத்தில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியை அதிமுக புறக்கணித்தது.
தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெற்றது. கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினர்.
இதைத்தொடர்ந்து, ஜூன் 3ந்தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா வரவுள்ளது. இதை அரசு விழாவாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அத்துடன் ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதி சிலை நிறுவப்பட உள்ளது. இதை துணைகுடியரசு தலைவர் வெங்கையாநாயுடு திறந்து வைக்க இருக்கிறார். இந்த நிலையில், இன்று சட்டப்பேரவை மண்டபத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலரை சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட, சபாநாயகர் அப்பாவு பெற்றுக்கொண்டார். இந்த சிறப்பு மலர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு மலரில் கடந்த 1922 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரை தமிழக சட்டமன்றத்தின் முக்கிய நிகழ்வுகள் குறித்த சிறப்பு படங்கள் மற்றும் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும்,கருணாநிதி படத்திறப்பு விழா குறித்த நிகழ்வுகளின் படங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த நிகச்சியை அதிமுக புறக்கணித்துள்ளது. திமுக உள்பட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து,காலை 10 மணிக்கு நடைபெறும் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்.மேலும்,இன்றுடன் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நிறைவு பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.